கஜா புயல் பாதிப்பு: 2 லாரிகளில் உதவிப்பொருட்களை அனுப்பிய ஜிவி பிரகாஷ்
- IndiaGlitz, [Monday,November 19 2018]
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை கலங்கடைத்த 'கஜா' புயலா கோடிக்கணக்கான பொருட்சேதங்கள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா 40க்கும் மேற்பட்ட மனித உயிர்களையும் ஏராளமான கால்நடைகளின் உயிர்களையும் பறித்தது. இந்த புயலால் ஏற்பட்ட இழப்பு அந்த பகுதி மக்களின் மீளமுடியாத இழப்பாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை வெள்ளம், கேரள வெள்ளம் ஆகியவை ஏற்பட்டபோது தாராளமாக நிதியுதவி செய்த தமிழக மக்கள் கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் எப்போதும் திரைத்துறையில் இருந்து முதல் நபராக உதவி செய்யும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி செய்துளார்.
நாகை, வேதாரண்யம் மற்றும் டெல்டா பகுதி மக்களுக்காக கஜா புயல் நிவாரண உதவிகளை 2-லாரிகளில் ஜி.வி.பிரகாஷ் அனுப்பி வைத்துள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் 'ஜெயில்' படத்தின் டப்பிங் பணிகளில் இருந்த ஜி.வி.பிரகாஷ் டப்பிங்கை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இப்படி ஒரு அதிரடி பணியில் ஈடுபட்டதை சோசியல் மீடியாக்களும், பொது மக்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இது பற்றி அவர் கூறியதாவது:
கஜா புயல் ஈவு இரக்கமற்ற பேரிடர் மற்றும் பேரழிவு . மக்கள் மீது தொடுக்கப்பட்ட இயற்க்கை சீற்றம் மனதுக்கு வேதனையை தந்தது. தென்னை மரங்கள், மா மரங்கள். வீடுகள், கால்நடைகளை இழந்து நிற்கும் அந்த விவசாயிகளை நினைக்கும் போதும், படகுகளை இழந்து நிற்கும் மீனவர்களை நினைக்கும் போதும் நிலை குலைந்து போனேன் . அவர்களுக்கு தேவை அனுதாபமோ, ஆறுதலோ அல்ல. முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவோம். பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து மனித நேயம் காப்போம் என ஜி.வி.பிரகாஷ் கூறினார். ஒக்கி புயலின் போதும் ஜி.வி.பிரகாஷ் களத்தில் இறங்கி சேவை செய்ததை குமரிமக்கள் பெரிதும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.