'தங்கலான்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்.. டிரைலர் எப்போது?

  • IndiaGlitz, [Monday,July 01 2024]

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ளதை அடுத்து அவரது பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே ’தங்கலான்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது. இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ’தங்கலான்’ திரைப்படம் வெளியாகும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை பணியை முடித்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் பின்னணி இசையை என்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்துள்ளேன், என்ன ஒரு திரைப்படம்.. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். அது மட்டும் இன்றி அசத்த வைக்கும் ட்ரெய்லர் மிக விரைவில் வெளியாக உள்ளது. அதை பார்க்கும் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ’தங்கலான்’ திரைப்படம் இந்திய சினிமாவின் ஒரு பெருமைக்குரிய படம்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.