குலேபகாவலி: திரைவிமர்சனம் காமெடி புதையல்
'தேவி' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் திரையுலகிற்கு ரீஎண்ட்ரி ஆன பிரபுதேவா நடித்த அடுத்த படம். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து, அதில் ஒரு புதையல் தேடல், ரொமான்ஸ் கலந்த படம் தான் இந்த 'குலேபகாவலி' இந்த படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையுமா? என்பதை இப்போது பார்ப்போம்
பிரிட்டிஷ்காரர்களிடம் வேலை பார்த்த ஒருவர், அவர்களுக்கே தெரியாமல் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரங்களை கடத்தி குலேபகாவலி கோவில் அருகே புதைத்து வைக்கின்றார். பின்னர் சாகும் தருவாயில் மகன் மதுசூதனன் ராவிடம் அந்த ரகசியத்தை கூறுகிறார். அவரும் அவரது மச்சான் ஆனந்த்ராஜூம் புதையை எடுக்க ஒரு கோஷ்டியை குலேபகாவலிக்கு அனுப்புகின்றனர்.
மன்சூர் அலிகான் தலைமையில் பிரபுதேவா, யோகிபாபுவின் கூட்டம் சிலைகளை கடத்தி விற்பனை செய்கிறது. இந்த நிலையில் குலேபகாவலி ஊரில் உள்ள ஒரு அரிய சிலையை கடத்த அட்வான்ஸ் வாங்கும் மன்சூர் அலிகான், பிரபுதேவா, யோகிபாபுவிடம் அந்த வேலையை கொடுக்கின்றார். பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வழிதெரியாமல் 'குலேபகாவலி' ஊரில் வந்து மாட்டிக்கொள்கிறார் ஹன்சிகா. அவரை காப்பாற்றும் ரேவதி, பின்னர் பிரபுதேவா கோஷ்டியுடன் இணைந்து கொள்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் எதிர்பாராமல் ஆனந்த்ராஜ் கோஷ்டியிடம் மாட்டி கொள்கின்றனர்.
இவர்கள் அனைவரும் குலேபகாவலிக்கு சென்று புதையல் பெட்டியை எடுத்தார்களா? அதில் புதையல் இருந்ததா? புதையலை தேடும் மற்ற கோஷ்டிகள் என்ன செய்தனர்? இந்த கோஷ்டிகளை பிடிக்க முயற்சிக்கும் இன்ஸ்பெக்டர் சத்யன் நிலை என்ன? என்பதே இந்த படத்தின் கிளைமாக்ஸ்
15 வருடங்களுக்கு முந்தைய பிரபுதேவாவை மீண்டும் திரையில் பார்க்கலாம். டான்ஸ், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் நிறைவான நடிப்பையே தந்துள்ளார். ஆக்சன் காட்சிகளிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
ஹன்சிகாவுக்கு வலுவில்லாத கேரக்டர் என்றாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி, மற்றும் ஒருசில இடங்களில் காமெடி மற்றும் சீரியஸ் நடிப்பை தந்துள்ளார்.
ரேவதிக்கு இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டர். இந்த படத்தின் பல காட்சிகளை இவர்தான் ஆக்கிரமித்துள்ளார். படம் முழுவதும் இவரது நடிப்பு நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்
யோகிபாபுவின் டைமிங் காமெடி, சத்யனின் ஏமாறும் அப்பாவி காமெடி, மொட்டை ராஜேந்திரனின் அம்மா செண்டிமெண்ட் காமெடி, மன்சூரலிகானின் காமெடி, முனிஷ்காந்தின் கலக்கல் காமெடி என படம் முழுக்க காமெடிக்கு என கூட்டமே உள்ளது. .
மாமன் மச்சான்களாக வரும் மதுசூதனன் ராவ், ஆனந்த்ராஜ் நடிப்பு ஓகே. ஆனந்த்ராஜ் வழக்கம்போல் காமெடி வில்லனாக கலக்கியுள்ளார்.
விவேக்-மெர்வின் இசையில் மூன்று பாடல்கள் கேட்கும்படி உள்ளது. குறிப்பாக' சேராமல் போனால்' பாடலில் கலக்கலான கிராபிக்ஸ் காட்சிகள் கண்ணுக்கு விருந்து. ஒரு காமெடி படத்திற்கு தேவையான கச்சிதமான பின்னணி இசை. அனந்தகுமாரின் ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பும் ஓகே ரகம்.
புதையல் வேட்டை என்ற டுவிஸ்ட்டை மையப்படுத்தி முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை உருவாக்கியுள்ள இயக்குனர் கல்யாண், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த படங்களை ஞாபகப்படுத்திகிறது. இருப்பினும் ஆங்காங்கே ஒருசில டுவிஸ்ட்களும், காமெடி காட்சிகளும் படத்திற்கு கைகொடுக்கின்றன. குறிப்பாக பத்து நிமிட கிளைமாக்ஸ் விழுந்து விழுந்து சிரிப்பதற்கு கியாரண்டி
மொத்தத்தில் லாஜிக் பற்றி யோசிக்காமல் காமெடிக்காக 'குலேபகாவலி'யை ஒருமுறை பார்க்கலாம்
Comments