பாலின சிக்கலின் உச்சக்கட்டம்… மனதை உருக்கும் சம்பவம்!!!
- IndiaGlitz, [Tuesday,December 22 2020]
பாகிஸ்தானில் பிறந்த 2 சகோதரிகள் பாலின பிறப்புறுப்பு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு, கடும் சிரமத்திற்கு இடையே ஆணாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். எவ்வளவோ பாலின மாறுபாட்டு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கே இது கடும் சாவலாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய சகோதரிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜராத் மாவட்டத்தில் உள்ள ஒரு தம்பதியினருக்கு 9 மகள்கள். அதில் 5 ஆவதாகப் பிறந்த பெண் வலீத். ஆறாவதாகப் பிறந்த பெண் முராத். வலீத் தற்போது 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால் இத்தனை வருடத்தில் அவரிடம் பெண்ணுக்குரிய ஒரு குணத்தையும் பார்க்க முடியவில்லை என்று அவருடைய பெற்றோர் கூறுகின்றனர். அதோடு முராத்துக்கும் இதேபோன்ற பிரச்சனை இருப்பதை அந்தத் தம்பதி கண்டு பிடித்தனர். இருவரும் மற்ற சிறுமிகளோடு சேர்ந்து விளையாடினாலும் அவர்களுடைய நடை, உடை, பாவனை என அனைத்தும் ஆண்களைப் போலவே இருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர் இஸ்லாமாபாத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி கழகத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.
அந்தப் பரிசோதனையில் இரு சகோதரிகளுக்கும் பாலின பிறப்புறுப்பு கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதாவது உருவத்தில் இருவரும் பெண்ணாக இருந்தாலும் உணர்வுகள் அனைத்தும் ஆணாகவே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய குறைபாடுகள் குழந்தை உருவான விதத்திலேயே ஏற்பட்ட கோளாறு என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சில நேரங்களில் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் வளரும்போதே அவர்களின் பிறப்புறுப்பு தோற்றத்தில் சிக்கல் ஏற்பட்டு விடுவதால் இதுபோன்ற பாலின சிக்கல் தோன்றுகிறது.
இதனால் இரு சிறுமிகளுக்கும் பாலின உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து 12 பேர் கொண்ட மருத்துவர் குழு கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி முதலில் வலீத்துக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி முராத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. 6 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை அடுத்து சில மாதங்கள் வரைக்கும் இருவரும் மருத்துவமனையிலேயே இருந்ததாகவும் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பத்தை அடுத்து சில குழந்தைகள் நல அமைப்புகள், சிறுவர்களிடம் காணப்படும் மாற்றங்களை குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். சிறுவயதில் கண்டுபிடிக்கப் பட்டால் எதிர்காலத்தில் ஏற்படும் தேவையில்லாத அசம்பாவிதத்தைத் தவிர்க்க முடியும் என்றும் ஆலோசனை வழங்கி வருகின்றன.