17 வயதில் கர்ப்பம் அடைவது இயல்புதான்… குஜராத் நீதிமன்றம் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பு!
- IndiaGlitz, [Friday,June 09 2023]
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் அடைந்த நிலையில் அதைக் கலைப்பதற்கு ஒப்புதல் கோரி அவரது பெற்றோர் தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறார். அந்தச் சிறுமியின் கர்ப்பம் குறித்த தகவல் சமீபத்தில் அவரது பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் சிறுமி மைனர் என்பதால் கர்ப்பத்தை கலைப்பதற்கு ஒப்புதல் கேட்டு அவரது பெற்றோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் சிறுமியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிக்கந்தர் சையத், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் மேலும் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதால் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி சமீர்ஜே டேவ் ‘கடந்த காலங்களில் பெண்கள் 14-15 வயதிற்குள் திருமணம் செய்துகொள்வதும் 17 வயதிற்குள் குழந்தை பெறுவதும் இயல்பானது. 4-5 மாத வித்தியாசங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை. எதற்கும் ஒருமுறை மனுஸ்மிருதியை படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.
மேலும் சிறுமியின் உடல்நிலை மற்றும் கரு பற்றிய மருத்துவ அறிக்கையை வைத்தே வழக்கை விசாரிக்க முடியும் என்று கூறிய நீதிபதி ராஜ்கோட்டில் உள்ள சிவில் மருத்துவமனை மருத்துவக் குழு பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கரு மற்றும் தாய் இருவரும் நல்ல நிலையில் இருந்தால் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி சமீர்ஜே டேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியச் சட்டப்படி ஒரு பெண் கர்ப்பம் தரித்த 24 வாரங்களுக்குள் அவரது உயிர் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏதேனும் இருந்தால் கருவை கலைக்க அனுமதி தரப்படும். ஆனால் குஜராத் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கருக்கலைப்பில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் உள்ளது.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பது குறித்த விசாரணையில் நீதிபதி சமீர்ஜே டேவ் 17 வயதில் கர்ப்பம் அடைவது எல்லாம் இயல்பானதுதான் என்றும் மனுஸ்மிருதியை படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் சுட்டிக்காட்டியிருப்பதும் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த வழக்கில் அடுத்தக் கட்ட விசாரணை ஜுன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.