பலாத்காரம் செய்த குற்றவாளியுடன் சமரசத்திற்கு வாய்ப்பு இருக்கா? நீதிபதியே கேள்வி?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கர்ப்பத்தை கலைப்பதற்கு ஒப்புதல் கேட்டு அவரது பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் பலாத்காரம் செய்த குற்றவாளியுடன் சமசரம் செய்துகொள்ள விருப்பம் இருக்கிறதா? என்ற நீதிபதியே கேள்வி கேட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் நீதிமன்றத்தில் கர்ப்பத்தை கலைப்பது தொடர்பாக மனு அளிக்கப்பட்டு இருந்தது. அந்த மனுவில் பாலியல் வன்கொடுமையால் 17 வயது முடிவடையாத சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அந்தக் கர்ப்பம் குறித்த தகவல் தாமதமாக தெரியவந்ததாகவும் இதையடுத்து 7 மாதக் கர்ப்பமான நிலையில் அவருடைய கர்ப்பத்தை கலைப்பதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் வேண்டும் எனவும் மேலும் கர்ப்பக் காலம் 7 மாதங்களாகி விட்டதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர்ஜே டேவ் முன்னதாக இந்தியாவில் பெண்கள் 14-15 வயதில் திருமணம் செய்து கொள்வது 17 வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது போன்றவை இயல்பானதுதான். 4-5 மாத இடைவெளியைப் பெரிதுபடுத்த வேண்டாம், ஒருமுறை மனுஷ்மிருதியைப் படித்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறியதோடு மருத்துவ அறிக்கையை கேட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கிற்கான விசாரணை மீண்டும் நடைபெற்ற நிலையில் மேலும் சர்ச்சையான விஷயங்களை நீதிபதி சமீர்ஜே பேசியிருப்பது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
விசாரணையில் பேசிய நீதிபதி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று சம்பந்தப்பட்ட வழக்கறிஞரிடம் விசாரித்துள்ளார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஏற்கனவே சமரசத்திற்கு முயற்சித்தேன். ஆனால் நேர்மறையான பதில் வரவில்லை என்று கூறிய நிலையில் குற்றவாளியை ஆஜர்படுத்துங்கள் என நீதிபதி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த காவல் அதிகாரிகள் அவர் மோர்பி மாவட்ட சிறையில் இருப்பதாகக் கூறியதை அடுத்து குற்றவாளியை ஆஜர்படுத்துங்கள். தற்போதுள்ள சாத்திய கூறுகள் குறித்து யோசித்து வருகிறேன். பல்வேறு அரசு திட்டங்கள் இருக்கின்றன. அவர் வரட்டும், நான் பேசுகிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை ஆஜப்படுத்துங்கள் என்றும் வழக்கறிஞருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே மனுஷ்மிருதியை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறிய நிலையில் தற்போது பகவத் கீதையில் உள்ள ஸ்திதபிரஜ்னா பற்றியும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
அதாவது ஒரு நீதிபதி ஸ்திதபிரஜ்னாவை போன்று இருக்க வேண்டும். அவர் கூறும் கருத்துகள் பாராட்டு மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் ஒரு தரப்பினர் அதை புறக்கணிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கருக்கலைப்புக்காக ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்து இருக்கும் சிறுமி வழக்கில் குற்றவாளியுடன் சமரசம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? என்று நீதிபதியே கேட்டு இருப்பதும் தன்னுடைய கருத்தை ஒரு தரப்பினர் புறக்கணித்தான் செய்வார்கள் என்று கூறுவதும் பலரது மத்தியில் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கிற்கான விசாரணை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments