இந்தியா வரும் டிரம்ப்.. குடிசை பகுதிகளை மறைக்க 7 அடியில் சுவர் கட்டும் பாஜக அரசு..!
- IndiaGlitz, [Friday,February 14 2020]
அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவியுடன் இணைந்து இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இரண்டு நாள்களும் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவுள்ளார்.
அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு குஜராத் மாநில அரசும், இந்திய அரசும் தயாராகிவருகிறது. இந்தநிலையில், குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்துக்கு அருகிலுள்ள குடிசைவாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரைகிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது.
அகமதாபாத்திலிருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த குடிசைவாரியக் குடியிருப்பில் பத்துவருடங்களுக்கும் மேலாக 500 வீடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். மக்களின் ஏழ்மை நிலையை ட்ரம்ப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்தச் சுவர் கட்டப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.