ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் கார்டு உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவு
- IndiaGlitz, [Thursday,August 18 2022]
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ரயிலில் கார்டு ஆக பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு என்ற பகுதியைச் சேர்ந்த 36 வயது மினிமோல் என்பவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் கார்டு ஆக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கவுகாத்தி விரைவு ரயிலில் சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை கார்டு ஆக பணிபுரிந்த இவர் திடீரென மாயமானதாக தெரிகிறது.
இந்தநிலையில் கார்டு மூலம் பச்சைக்கொடி தகவல் கிடைக்காததால் ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தி மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவருடைய உடல் குடியாத்தம் வளத்தூர் ரயில் நிலையம் அருகே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரயிலில் சென்ற போது அவர் பச்சை கொடி காட்ட முயன்ற போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மினிமோல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே பொது மேலாளர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.