ஜிஎஸ்டி எதிரொலி: ரூ.120 தியேட்டர் டிக்கெட் இனி எவ்வளவு தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,June 28 2017]
இந்தியா முழுவதும் வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. இதன் காரணமாக திரையுலகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி குறித்த தெளிவு இல்லாததால் வரும் 30ஆம் தேதி வெளிவர வேண்டிய 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்பட ஒருசில படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக திரையரங்குகளின் டிக்கெட்டுக்கள் உயரும் வாய்ப்பு உள்ளது.
ரூ.100க்கு குறைவான திரையரங்க கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியும், அதற்கு மேல் உள்ள கட்டணங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பெருநகரங்களில் உள்ள திரையரங்குகளில் பெரும்பாலும் ரூ.120 டிக்கெட் கட்டணமாக இருப்பதால் ஜூலை 1ஆம் தேதிக்கு பின்னர் 28% வரியுடன் கட்டணம் ரூ.153.60 என்று உயர வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் புக் செய்தால் அதன் சர்வீஸ் கட்டணத்தையும் சேர்த்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை உயர வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே திருட்டு விசிடி, ஆன்லைன் பைரசி ஆகியவை காரணமாக முதல் மூன்று நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் பார்வையாளர்கள் அதிகம் வருகின்றனர். இந்த நிலையில் கட்டணமும் உயர்ந்துள்ளதால் இனி திரையரங்குகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.