3 சம்மன்களுக்கு ஆஜராகாத இளையராஜாவுக்கு இறுதி நோட்டீஸ்: ஜிஎஸ்டி ஆணையம் அதிரடி

இசைஞானி இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகில் இசை மூலம் சாதனை செய்தவர் இசைஞானி இளையராஜா என்பதும் அவரது பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலமானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னையில் இயங்கி வரும் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர், இளையராஜாவுக்கு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சம்மன் அனுப்பி இருந்தார். அந்த சம்மனில் இளையராஜா சேவை வரி கட்டவில்லை என்றும் அதனை அடுத்து மார்ச் 10ஆம் தேதி தங்களது அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து மார்ச் 21ஆம் தேதி இரண்டாவது சம்மன் இளையராஜாவுக்கு அனுப்பப்பட்டது என்பதும் இந்த இரண்டு சம்மன்களுக்கும் அவர் ஆஜராகவில்லை என்பதால் மூன்றாவது சம்மனும் அனுப்பப்பட்ட போதிலும் அவர் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இளையராஜா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வரியோடு சேர்த்து கட்டணத்தை பெற்றுள்ளார் என்றும் அந்த வரியை அவர் ஜிஎஸ்டி ஆணையத்திடம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் புலனாய்வு துறை அலுவலகத்தில் இளையராஜா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என இறுதி நோட்டீஸ் தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இந்த இறுதி நோட்டீசுக்கு இளையராஜா தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் சமீபத்தில் இளையராஜா, பிரதமர் மோடி மற்றும் சட்ட மேதை அம்பேத்கார் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையானது என்பது தெரிந்ததே.