ஸ்விகி, சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Wednesday,September 15 2021]
ஏற்கனவே உணவகங்களில் உண்ணும்போது நாம் சாப்பிடும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்தி வருகிறோம். இதைத்தவிர ஆன்லைன் டெலிவரி செய்யும் நிறுவனங்களான ஸ்விகி மற்றும் சோமேட்டோ போன்ற வர்த்தக நிறுவனங்களுக்கும் இனி ஜிஎஸ்டி வரிமுறை விதிக்கப்பட இருக்கிறது.
இதனால் ஆன்லைனில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் இனிமேல் இரட்டை ஜிஎஸ்டி வரிமுறை செலுத்த வேண்டி வரலாம் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஆன்லைனில் பொருட்களை விநியோகம் செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிமுறை வழக்கத்தில் உள்ளது. அதைப்போல இனி ஆன்லைனில் உணவுப் பொருட்கள் விநியோக நிறுவனங்களுக்கும் இனி ஜிஎஸ்டி விதிப்பதற்கான நடைமுறை கொண்டு வரப்பட இருக்கிறது.
இதற்கான பேச்சுவார்த்தை வரப்போகிற ஜிஎஸ்டி கூட்டத்தொடரில் நடைபெற இருக்கிறது என்றும் இந்தக் கூட்டத்திற்கு பின்பு ஸ்விகி, சோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படி ஸ்விகி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிமுறை விதிக்கப்படும்போது, வாடிக்கையாளர்கள் ஏற்கனவே உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதோடு கூடவே டெலிவரிக்கும் என தனியாக ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் உணவுப் பிரியர்கள் இரட்டை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களை நம்பி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை உணவு ஆர்டர்களை குறைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்துவிடுமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டு இருக்கிறது.