நாளை முதல் மளிகைப்பொருட்கள் வீடு தேடி வரும்....! மக்கள் செய்ய வேண்டியது என்ன...?
- IndiaGlitz, [Sunday,May 30 2021]
பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய திட்டம், நாளை முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பித்தும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றது. இதனால் தள்ளுவண்டி மற்றும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், கனிகள் போன்றவற்றை மக்கள் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்ய அரசு அனுமதியளித்திருந்தது. இந்தநிலையில் மளிகைப்பொருட்களையும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது.
ஒவ்வொரு ஊரிலும், அந்தந்த பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகள், தங்கள் வண்டிகள் மூலம் தெருத்தெருவாக, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மளிகைப்பொருட்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கடைவியாபாரிகள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சியிடம் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
பொதுமக்கள் என்ன செய்யவேண்டும்....?
எந்தெந்த கடைவியாபாரிகள் லைசன்ஸ் பெற்று கடைநடத்துகிறார்களோ, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுடைய வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளுக்கு சீட்டு எழுதிக்கொடுத்தோ, செல்போன்கள் மூலமாகவோ பொருட்களை சொன்னால், கடைக்காரர் வீடுகளுக்கு வந்து பொருட்களை கொடுத்துவிடுவார். இதற்கு காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மளிகை கடைகளை முழுவதும் திறக்காமல், பக்க வாட்டுக் கதவுகள் அல்லது பின்பக்க கதவுகள் வழியாக பொருட்களை எடுத்துச்சென்று விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 7500-க்கும் அதிகமான வியாபாரிகள் லைசன்ஸ் பெற்று, மளிகை கடைகளை நடத்தி வருகிறார்கள். அதனால் இவர்களுக்கு மட்டுமே இருசக்கர வாகனங்களில் சென்று மளிகை பொருட்களை மக்களுக்கு வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்களின் பெயர், கடை பெயர், வாட்ஸ் அப்எண், தொலைபேசி எண் என அனைத்தும் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் இதில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.