வெறும் 9 நாட்களில் பிரிட்டன் அரசு உருவாக்கிய பிரம்மாண்ட மருத்துவமனை!!!

  • IndiaGlitz, [Wednesday,April 08 2020]

 

கொரோனா வைரஸின் மையப்பகுதியாக தற்போது ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் மருத்துவமனைகளுக்கான தட்டுப்பாடுகள் அதிகரித்திருக்கிறது. இதற்காக பிரிட்டன் அரசு, தலைநகர் லண்டனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் வெறுமனே 9 நாட்களில் ஒரு புதிய மருத்துவமனையை வடிவமைத்து இருக்கிறது. இந்த மருத்துவமனையில் வென்டிலேட்டருடன் கூடிய 4,000 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதும் சிறப்புக்குரியது.

கிழக்கு லண்டனில் உள்ள எக்ஸ்செல் கண்காட்சி மையம்தான் தற்போது புதிய மருத்துவமனையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு விருந்தினர்களை தங்கவைக்கவும், பொது நிகழ்ச்சிகளை நடத்தவும் பயன்படுத்தப் பட்டு வந்த இந்தக் கட்டடம் தற்போது முழுவதுமாக மருத்துவமனையாக மாறியிருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு NHS Nightingale எனப்பெயரிடப்பட்டுள்ளது.

9 நாட்களில் 87,328 சதுர மீட்டர் கொண்ட இரட்டை கண்காட்சி அரங்குகளில் 80 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் 42 படுக்கைகள் உள்ளன. மொத்த 4,000 படுக்கைகள் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர்களுடன் காட்சியளிக்கின்றன. இது கொரோனா வைரஸ்க்காக உருவாக்கப்பட்ட உலகிலேயே பெரிய மருத்துவமனையாகும். ராயல் கூர்க்கா ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த 200 வீரர்கள் அன்றாடம் வேலைப்பார்த்து இந்த மருத்துவமனையை வடிவமைத்துள்ளனர்.

மேலும், செவிலியர்கள் உதவியாளர்கள் வந்து செல்ல உதவியாக போதிய இடைவெளி விட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. நோயாளிகள் இறந்தால் நோய்த் தொற்று ஏற்படாமல் உடல்களை வைப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மருத்துவமனை ரயில், கார், பேருந்து என எளிதில் செல்லும் இடத்தில் அமைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மருத்துவமனை மாதிரியை கனடா, ஆஸ்திரேலியா நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.