கிராம சபை கூட்டம் - பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய சில விளக்கங்கள்
- IndiaGlitz, [Thursday,January 16 2020]
இந்தியாவின் பொருளாதாரம் கிராமங்களில் இருந்து தான் தொடங்குகிறது என்றார் காந்தியடிகள். கிராமங்கள் தன்னளவில் தன்னிறைவு பெற்று விளங்கினால் மட்டுமே, பொருளாதார வளர்ச்சி நிலைமையில் முன்னேற்றம் பெற முடியும். எனவே ஒவ்வொரு கிராமமும் முழு அதிகாரம் பொருந்தியதாக மாற்றி அமைக்கும்போது, கிராமங்கள் ஒரு சிறு குடியராகத் திகழும் என்று நம்பிக்கை அளித்தார்.
தற்போது இந்தியாவில் கட்டமைக்கப் பட்டிருக்கிற நமது உள்ளாட்சி அமைப்பு என்பது மிகவும் வலிமை வாய்ந்த, அதிகாரம் பொருந்தியதாகும். இந்தியக் கிராமங்களின் உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் பல்வேறு சட்டத் திருத்தங்களின் வாயிலாக உருவாக்கப்பட்டு பின்னர், மாநிலத் தேர்தல் ஆணையத்துடன் இணைத்துக் கொள்ளப் பட்டன. உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய முக்கியமான பணியினை, மாநிலத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
கிராம சபை கூட்டங்கள் எந்தெந்த நாட்களில் நடக்கும்
ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) போன்ற நான்கு நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் இந்த ஒரே நாளில்தான் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து பேசி கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
தமிழக உள்ளாட்சி தேர்தல்கள்
1994 ஆம் ஆண்டு மே மாதத்தில் கொண்டு வரப்பட்ட 73 மற்றும் 74 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களின்படி, தமிழகப் பஞ்சாயத்துக்களுக்கான சட்டங்கள் இயற்றப்பட்டன. இதில் 73 என்பது கிராமப்புற ஊராட்சிக்கான விதிகளைப் பற்றியது ஆகும். 74 என்பது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பினைக் குறிக்கிறது. தமிழகப் பஞ்சாயத்துக்களுக்கான சட்டங்கள் இயற்றப் பட்ட பின்னர் தான், தமிழ்நாட்டில் மாநிலத் தேர்தல் ஆணையம் உருவாவதற்கான வழிவகை ஏற்பட்டது எனலாம். இந்த மாநிலத் தேர்தல் ஆணையம் என்பது நிரந்தரமான அமைப்பு ஆகும். இதன் இயக்குநர் மட்டும் அவ்வபோது மாற்றப்படுகிறார்.
தமிழகத்தின் முதல் உள்ளாட்சி தேர்தலானது அக்டோபர், 1996 இல் மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது. பின்னர் 2001, 2006, 2011 எனத் தொடர்ந்து நான்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. தற்போது 2019 இல் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, அனைத்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிகாரிகள் தங்கள் பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. உள்ளாட்சி ரீதியாகத் தேர்தலை நடத்தி உறுப்பினர்களைத் தேர்வு செய்த பின்னரே, கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான நிதிகளை மத்திய நிதிக் குழுவில் இருந்து பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காலத்தில் மத்திய நிதிக்குழு கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான நிதிகளை கொடுக்காது என்பதால் உள்ளாட்சி பகுதிகளில் நிர்வாகப் பணிகள் முடங்கிப் போகவும் வாய்ப்புள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள்
கிராம உள்ளாட்சி அமைப்புகள் : 1.கிராம ஊராட்சி (கிராம பஞ்சாயத்து) 2. ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து யூனியன்) 3. மாவட்ட ஊராட்சி (ஒன்றியம்) என மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. அதே போல மாநகராட்சி உள்ளாட்சி அமைப்பானது 1. பேரூராட்சி 2. நகராட்சி 3. மாநகராட்சி என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அமைப்பும் தன்னளவில் மிகவும் சுதந்திரமான அதிகாரங்களைப் பெற்று விளங்குகின்றன.
கிராம சபை கூட்டம்
கிராம சபை கூட்டமென்பது உள்ளாட்சி பகுதிகளில் காணப்படுகின்ற பிரச்சினைகளைக் குறித்தும், செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிப்பதற்கான ஒரு களமாக அமைகிறது. மாநிலச் சட்ட மன்றத்தைப் போன்றும், மத்திய நாடாளுமன்றத்தைப் போலவும் இந்தக் கிராம சபை கூட்டங்களில் விவாதங்கள் நடத்தப்படும். விவாதங்கள் நடைபெறுவதோடு மட்டுமல்லாது தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இங்குக் கொண்டு வரப்படுகின்ற தீர்மானங்கள் மாநிலச் சட்ட மன்றங்களில் கொண்டு வரப்படுகின்ற தீர்மானத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது.
இந்தியக் கிராமங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் உள்ளாட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் இந்தக் கூட்டங்களைக் கட்டாயம் நடத்த வேண்டும். எந்தச் சூழலிலும் இந்தக் கூட்டங்களை நிறுத்தக் கூடாது என்பது உள்ளாட்சி அமைப்புகளில் மிகவும் முக்கியமான விதியாகும். கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சி தலைவர், கவுன்சிலர், வார்டு மெம்பர்கள் மட்டுமல்லாது வட்டார வருவாய்த் துறை அதிகாரியும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மாவட்டக் கலெக்டர் முதற்கொண்டு இந்தக் கிராம சபை கூட்டங்களில் மற்ற 28 துறை அதிகாரிகளும் பங்கு கொள்ள வேண்டும்.
கிராம நிர்வாக தலைவர் மற்றும் கவுன்சிலர் கலந்து ஆலோசித்து கிராமத்தின் ஏதாவது ஒரு பகுதியில் இந்தக் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். 7 நாட்களுக்கு முன்பே கிராம சபை கூட்டம் நடைபெறுவதைக் குறித்து கிராம மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒரு கிராம சபை கூட்டத்தில் கிராமத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 10 சதவீத மக்களாவது கலந்து கொள்ள வேண்டும். ஒரு கிராமத்தில் சுமார் 500 பேர் இருக்கின்றனர் என்றால் 50 பேராவது கலந்து கொள்ள வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.
மேற்கண்ட நான்கு நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டே தீர வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கிராம சபை கூட்டங்களை நிறுத்தக் கூடாது. கூட்டங்கள் நடத்தப் படாமல் இருந்தாலோ அல்லது மக்களுக்கு முறையான அறிவிப்புகள் கொடுக்கப்படாமல் இருந்தாலோ வட்டார வருவாய் துறை அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம்.
என்ன தீர்மானங்கள் நிறைவேற்றலாம்
இந்தக் கூட்டங்களில் கிராம வளர்ச்சியினைக் குறித்தும், கிராமப் பகுதிகளில் செய்து முடிக்கப்பட வேண்டிய நிர்வாகப் பணிகளைக் குறித்தும் கலந்து ஆலோசிக்கலாம். கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற பிரச்சினைகளைச் சரி செய்யும் பொருட்டும் விவாதங்கள் நடைபெறும்.
கிராம சபை கூட்டங்களில் கிராம மக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம். ஒருவர் மற்ற கிராமங்களில் நடைபெறுகின்ற கூட்டங்களிலும் பார்வையாளராகக் கலந்து கொள்ளலாம். ஆனால் கருத்து தெரிவிக்க இயலாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிராம நிர்வாகச் சபை கூட்டங்களில் போடப்படுகின்ற தீர்மானங்கள், கிராமப் புறங்களின் பிரச்சனைகளைக் குறித்தே அமைய வேண்டும். அதாவது மாநில அரசுகள், மத்திய அரசின் நிர்வாகச் செயல்பாடுகளின் கீழ் உள்ள தீர்மானங்களை நிறைவேற்றும் போது அத்தகைய தீர்மானங்கள் மீது எந்த வகையான முடிவுகளையும் எட்ட முடியாது.
யாரெல்லாம் தலையிடலாம்
கிராம சபைகளில் நிறைவேற்றப் படுகின்ற தீர்மானங்கள் மீது மாவட்ட கலெக்டர்கள் மற்றும் நீதிமன்றங்கள் மட்டுமே கருத்துத் தெரிவிக்க இயலும். அதே போல உள்ளாட்சி அமைப்புகளில் போடப்படுகின்ற தீர்மானங்களை யாரும் தடை செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத் தக்கது. உள்ளாட்சி அமைப்பின் தீர்மானங்களை ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், துணைத் தலைவர், சம்பந்தப் பட்ட வட்டார துறை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். தனது அதிகாரத்திற்கு உட்பட்டு வராத தீர்மானங்கள் என்றால் மாநில அரசின் தலையீட்டிற்குக் கொண்டு சென்று அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு பஞ்சாயத்து அதிகாரிகளுடையது ஆகும்.
கிராம சபையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் நிறைவேறவில்லை என்றால், அதனைக் குறித்து புகார் தெரிவிக்கவும் மக்களுக்கு வாய்ப்பு உண்டு. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பதிவேட்டினைப் பொது மக்கள் பணம் செலுத்தி அதனைச் சரிப்பார்க்கவும் செய்யலாம்.
கிராம சபை கூட்டத் தீர்மானங்களின் வெற்றி
திருவள்ளுவர் மாவட்டத்தின் குத்தம்பாக்கத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பகுதி தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட இருந்த போது, அந்த ஊர் கிராம சபையால் நில கையகப்படுத்தலுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கிராம சபையின் தீர்மானத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் வாயிலாக நிலத்தின் மீதான உரிமையில் தமிழக அரசு கூட தலையீடு செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. பல கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் இந்தக் கிராம சபை தீர்மானங்களின் மூலமாக அகற்றப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தின் சில கிராமங்களில் 8 வழிச்சாலைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிராமங்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் தீங்கு நேரும் போது மாநில அரசின் திட்டங்களை எதிர்த்தும் சில சமயங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
சிறு குடியரசுக்கான அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருக்கின்ற கிராமங்கள் அதன் உள்ளாட்சி அமைப்புகளால் தான் முழுமைப் பெறுகின்றன. இந்தியாவின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்கள் தன்னளவில் தன்னிறைவு பெற்று விளங்க வேண்டுமானால் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப் பட வேண்டும். கூட்டங்கள் முழுமையான வெற்றியினைப் பெறுவதற்குக் கிராம மக்கள் இதில் முழுமையாகப் பங்கு கொள்ள வேண்டும். மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையாக வட்டார அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தீர்வினை எட்டப்பட வேண்டும்.