அரசு பள்ளியில் தான் படிப்பேன்: தனியார் பள்ளிகள் அழைத்தும் செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர்..!
- IndiaGlitz, [Wednesday,June 28 2023]
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாற்றுத்திறனாளி மாணவரை தங்கள் பள்ளிக்கு தனியார் பள்ளிகள் அழைத்தும், தான் அரசு பள்ளியில் தான் படிப்பேன் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் உதவியால்தான் நான் அதிக மதிப்பெண் பெற்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தி வர்மா என்ற என்பவர் 500க்கு 437 மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
இவர் சிறுவயதில் மின்சாரம் தாக்கியதால் தனது இரு கைகளை இழந்த நிலையில் பெற்றோர்களின் அரவணைப்பால் துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் படித்து வருகிறார்.
இந்த நிலையில் கீர்த்தி வர்மாவின் திறமையை கேள்விப்பட்ட சில தனியார் பள்ளிகள் அவருக்கு 11ஆம் வகுப்பு படிக்க அழைப்பு விடுத்தன. ஆனால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாத கீர்த்தி வர்மா தொடர்ந்து அரசு பள்ளியில் தான் படிப்பேன் என்றும் என் வெற்றிக்கு அரசு பள்ளியும், அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.