கொரோனா தடுப்பூசி சிலருக்கு மட்டும் தானா??? மத்திய அரசின் சர்ச்சை கருத்து!!!

  • IndiaGlitz, [Wednesday,December 02 2020]

 

நேற்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன், ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகைக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்குவது குறித்து அரசு ஒருபோதும் பேசவில்லை என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பேசிய அவர் மக்கள் தொகையில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்தால் ஒட்டு மொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பு மருந்து செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட கூடிய மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவதன் மூலும் கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க அரசு விரும்புவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவாவும் தெரிவித்து உள்ளார். இத்தகைய கருத்துகள் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசியை வழங்கப் போவதில்லை என்பதை தெளிவாக்குகின்றன. இதனால் தொடர்ந்து முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ராஜேஷ் பூஷன், தடுப்பு மருந்தி செயல்திறன் சிலரது உடலில் 60% ஆகவும் சிலரது உடலில் 70% ஆகவும் இருக்கும். இந்த வேறுபாடு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வது குறித்து மக்களிடையே அதிக தயக்கத்தை உண்டாக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.