செப்டம்பர்-1-இல் பள்ளிகள் திறக்கப்படும்....! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி....!
- IndiaGlitz, [Saturday,August 21 2021]
வருகின்ற செப்டம்பர்-1 ஆம் தேதி திட்டமிட்டதன் பேரில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்துள்ள நிலையில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கடந்த ஆகஸ்ட்- 2 முதல் பள்ளிக்கு செல்ல துவங்கி விட்டனர்.
இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை மட்டும், பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் வரும் செப்டம்பர்-1 முதல் மாணவர்களுக்காக பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
மாணவர்கள் வரும்போது வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும், சுழற்சி முறையின் அடிப்படியில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்யப்படும், சிறார்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கூறியிருப்பதாவது, வகுப்புகளில் மாணவர்களை வழிநடத்துவதற்கு, பாதுகாப்பு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. வருகின்ற செப்.1ம் தேதி முதல் 9, 10,11, 12ம் வகுப்புகளை துவங்க, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.