கல் சிலைக்கு ரூ.2500 கோடி, உயிருள்ள விவசாயிகளுக்கு வெறும் ரூ.1750 கோடியா?

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மத்திய அரசு இந்த போராட்டத்தை இதுவரை சீரியஸாக கண்டுகொள்ளவில்லை. ஒருசில அமைச்சர்கள், போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று வார்த்தை அளவில் கூறி வருகின்றார்களே தவிர செயலில் ஒன்றுமில்லை.

மேலும் தமிழக அரசு, மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,595 கோடி வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால் மத்திய அரசோ முதல்கட்ட தவணையாக ரூ.1748.28 கோடி அதாவது வெறும் 5% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மும்பையில் உள்ள அரபிக்கடலில் உருவாகவுள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு ரூ.3600 கோடி ஒதுக்கிய மத்திய அரசு முதல்கட்ட பணிகளுக்காக ரூ.2500 கோடி அதாவது சுமார் 70% தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.

மராட்டிய மன்னன் சிவாஜியின் கல்சிலைக்கு காட்டும் கருணையை கூட தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் மீது மத்திய அரசு காட்டாதது ஏன்? என்பதே தமிழக மக்கள் அனைவரின் கேள்வியாக உள்ளது. மத்திய அரசு தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகாமல், தமிழகமும் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை நினைவில் வைத்து தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.