கன்னத்தில் தட்டிய பெண் நிருபருக்கு கவர்னர் அனுப்பிய கடிதம்
- IndiaGlitz, [Wednesday,April 18 2018]
நிர்மலாதேவி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அந்த சந்திப்பு முடிந்ததும் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் தட்டி, நீங்கள் என் பேத்தி போல் இருப்பதாக கூறினார்.
பேத்தி வயதை உடையவர் என்றாலும் பெண் நிருபரின் கன்னத்தில் தட்டியது அவர் வகித்து வரும் கவர்னர் பதவிக்கு அழகல்ல என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனம் செய்தனர். அந்த பெண் நிருபரும் இதுகுறித்து காட்டமான டுவீட் ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று கவர்னர் பன்வாரிலால் அந்த பெண் நிருபருக்கு எழுதிய கடிதத்தில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். எனது பேத்திபோல் நினைத்து கன்னத்தில் தட்டியதாகவும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், இருப்பினும் அந்த செயல் உங்கள் மனதை நோகடித்திருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கவர்னர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்,.
இந்த கடிதம் குறித்து அந்த பெண் நிருபர் தனது டுவிட்டரில், 'கவர்னரை மன்னிப்பை ஏற்று கொள்வதாகவும், ஆனாலும் அவர் கூறிய காரணத்தை நான் ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.