ஆளுனரின் விரிவான அறிக்கை. ஜனாதிபதி கையில் தமிழக அரசின் எதிர்காலம்
- IndiaGlitz, [Wednesday,February 22 2017]
கடந்த 18ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமியின் அரசு வெற்றி பெற்றபோதிலும் அரியணைக்கு மேல் இன்னும் கத்தி தொங்கி கொண்டே உள்ளது.
ஒருபக்கம் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இன்னொரு பக்கம் நாளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து சட்டசபையில் நடந்ததை மு.க.ஸ்டாலின் விவரிக்க உள்ளார்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இரண்டு முறை நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்தது, சபாநாயகர் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டது, சபைக்காவலர்கள் என்ற போர்வையில் தமிழக காவல்துறை அதிகாரிகள் சட்டமன்றத்தில் புகுந்தது, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சி தரப்பில் இருந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழக அரசு நீடிப்பதும், கலைக்கப்படுவதும் ஜனாதிபதியின் கையில்தான் உள்ளது. விரைவில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி சரியான நடவடிக்கையை எடுத்து தனது பதவியின் பெருமையை காப்பாற்றுவார் என்று கோடானுகோடி தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.