இளைஞர்கள் போராட்டம் வெற்றி. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு
- IndiaGlitz, [Saturday,January 21 2017]
தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு தலைவன் இல்லாத, தலைமை இல்லாத, தன்னலம் இல்லாத போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இளைஞர்களின் உணர்ச்சிபூர்வமான போராட்டம் மத்திய மாநில அரசுகளை தட்டி எழுப்பி உடனடியாக ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை இயற்ற வைத்துள்ளது.
ஆம் சற்று முன் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் கையெழுத்திட்டார். ஆளுனர் கையெழுத்திட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த, அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படுவதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.. மேலும் காளைகள் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்தாலும், அந்த காளையை பாதுகாத்து, பராமரிக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளதாக, அந்த அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அவசரச் சட்டத்தை தடுக்க முடியாத வகையில் சில புதிய உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு இனிமேல் யாரும் தடை வாங்க முடியாது என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜல்லிக்கட்டுக்கான தடை அவசர சட்டத்தின் மூலம் நீங்கியதை அடுத்து நாளை அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு நடைபெறும் என்றும் இந்த ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க இன்று இரவு முதல்வர் மதுரை செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.