7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்: 300 மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க வாய்ப்பு
- IndiaGlitz, [Friday,October 30 2020]
நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்யும் மசோதா சமீபத்தில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த மசோதா கவர்னரின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டது
ஆனால் கவர்னர் இந்த மசோதாவில் கையெழுத்திட தாமதப்படுத்தியதால் இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. நேற்று இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ‘கவர்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு பதில் சொல்லத் தேவையில்லை என்றாலும் இந்த மசோதா குறித்து விரைவில் கையெழுத்திடுவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியது. மேலும் சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் குறித்து முடிவெடுக்க கவர்னருக்கு இத்தனை நாள் அவகாசம் தேவையா? என்றும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நூற்றுக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்த அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதனால் கவர்னர் கையெழுத்திடாமலே இந்த சட்டம் அமலுக்கு வரும் நிலை இருந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு முக ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றால் 8 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மெடிக்கல் சீட் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது கவர்னர் கையெழுத்திட்டுள்ளதால் 300க்கும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் மெடிக்கல் படிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது