கட்டண உயர்வு ஒன்றுதான் தீர்வா? மாற்று வழியில் அரசு சிந்திக்கலாமே!
- IndiaGlitz, [Sunday,January 21 2018]
தமிழகத்தில் நேற்று முதல் பேருந்து கட்டணங்கள் சுமார் 50% வரை உயர்ந்துள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மீது அரசு இன்னுமொரு சுமையை ஏற்றியுள்ளது. டீசல் விலை உயர்வு, ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று அரசு கூறுவது ஒருவகையில் நியாயம் என்றாலும் கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்து துறையை லாபத்தில் கொண்டு செல்ல முடியாதா? என்ற கேள்வி சாமான்யனின் மனதில் எழுகிறது. ஒரே ஒரு பேருந்து வைத்து நடத்தும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட லாபத்தில் இருக்கும்போது இத்தனை வசதிகள் உள்ள அரசு போக்குவரத்து மட்டும் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது? என்ற கேள்வியே பொதுமக்கள் மனதில் எழுகிறது.
போக்குவர்த்து துறையில் பயணிகள் கொடுக்கும் கட்டணங்கள் மட்டுமே தற்போது வருவாயாக உள்ளது. இந்த வருவாயை பலவிதங்களிலும் கிடைக்கும் வகையில் அரசு ஏன் சிந்திக்க மறுக்கின்றது என்பது புரியவில்லை. ஒவ்வொரு பேருந்திலும் தொலைக்காட்சியை வைத்து அதில் விளம்பரம் சேகரித்தால் கோடிக்கணக்கில் வருமானம் வரும். தனியார் கூரியர் நிறுவனங்கள் போல் அரசு கூரியர் சர்வீஸ் ஆரம்பித்து அதற்கு அரசு பேருந்துகளை பயன்படுத்தினால் அதிலும் வருமானம் வரும். நெடுந்தூரம் பயணம் செய்யும்போது ஒரு பாடாவதி தனியார் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதற்கு பதிலாக அரசே நெடுஞ்சாலைகளில் உணவகங்களை நடத்தி பயணிகளுக்கு தரமான உணவையும் கொடுத்து வருமானமும் பார்க்கலாம். மேலும் பேருந்துகளில் விளம்பரங்கள் அனுமதிக்கப்பட்டு அதிலும் வருமானம் பெறலாம். இதையெல்லாம் முறைப்படி ஆலோசனை செய்து வருமானத்தை அதிகரித்தால் உண்மையில் கட்டணமில்லா இலவச பேருந்துகளையே இயக்கலாம் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
மக்களின் நலன் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு அரசு சிந்தித்தால் அதற்கு ஆயிரம் வழிகள் கிடைக்கும். இதுபோன்ற மாற்று வழிகளை அரசும், அதிகாரிகளும் சிந்தித்து போக்குவரத்து துறையின் வருமானங்களை வேறு வகையில் உயர்த்தி பொதுமக்களின் சுமையை குறைக்க வேண்டியது ஒரு அரசின் கடமை.