மூடப்படாத ஆழ்துளை கிணறுகள்: சுஜித்தின் உயிர் கடைசியாக இருக்கட்டும்!
- IndiaGlitz, [Tuesday,October 29 2019]
மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து இன்னொரு சிறுவன் இன்று பலியாகியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் பல உயிர்கள் இதே போல் இழக்கப்பட்டிருந்த நிலையிலும் நம்மில் பலர் இன்னும் திருந்தாமல் தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விட்டுவிடுகின்றனர்
பணம் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் போர்வெல் போடலாம் என்ற நிலைதான் தற்போது தமிழகத்தில் உள்ளது. போர்வெல் போட அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படையை யாரும் பின்பற்றுவதில்லை. நாம் என்னதான் வருந்தினாலும் இது முழுக்க முழுக்க மக்களின் அலட்சியத்தால் ஏற்பட்டது தான்.
கடந்த சில வருடங்களில் பல உயிர்கள் மூடப்படாத ஆழ்துளைக் கிணறு தான் காரணமாக இழக்கப்பட்ட பின்னராவது நம்மிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். கடைசியாக சுஜித் தனது உயிரை கொடுத்து நமக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தி சென்றுள்ளார். இனியும் நாம் திருந்தாவிட்டால் மீள வழியே இல்லை.
இந்த விழிப்புணர்வை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும். அரசு என்னதான் சட்டங்கள் இயற்றினாலும் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் ஒரு பொறுப்புணர்வு வேண்டும். இலட்சக்கணக்கில் செலவு செய்து ஆழ்துளை கிணறுகள் தோண்டும் கிணற்றின் ஓனர்கள் அதில் தண்ணீர் வராவிட்டால் ஒரு சில ஆயிரங்கள் செலவழித்து அதை மூடாமல் வைக்கும் அலட்சியம் தான் இம்மாதிரியான உயிரிழப்புக்கு காரணம்.
இந்த உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே செல்வதை அரசும் தகுந்த சட்டம் இயற்றி மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளின் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும். கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனையே நம் மக்கள் திருந்துவதற்கு உரிய ஒரே வழியாகும்.
என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் நம் மக்கள் இரண்டு நாட்கள் அதனை பின்பற்றி விட்டு அதன் பிறகு மறந்து விடுவார்கள். ஆனால் தண்டனை பெரும் தொகை அபராதம் என்ற அறிவிப்பு செய்தால் கண்டிப்பாக அனைவரும் அதனை பின்பற்றுவார்கள். பயம் இருந்தால் மட்டுமே இங்கு ஒழுக்கம் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.