துறை மேம்பாட்டுக்காக கொரோனா பேரிடர் காலத்திலும் அதிரடி திட்டங்களை செயல்படுத்திய தமிழக அரசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தலைமைச் செயலகத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்த காணொலி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொருளாதார வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும் சுட்டிக்காட்டினார். அதில் எனது தலைமையில் 14 முறை மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் 9 முறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஆய்வுக்கூட்டங்கள் காணொலி காட்சி வாயிலாக நடத்தப்பட்டன என்றும் தெரிவித்துக் கொண்டார்.
அதுமட்டுமல்லாது தமிழகத் தலைமைச் செயலர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் 11 முறை காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். இப்படி நடத்தப்படும் தொடர் ஆலோசனைக் கூட்டங்களில் மூலம் உரிய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினருடன் கலந்து ஆலோசித்து தேவையான முடிவுகள் எட்டப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் அமல்படுத்த முடிகிறது என்றும் விளக்கம் அளித்தார்.
இதுவரை தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை, மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.7,162 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது என்றும் முதல்வர் தெரிவித்துக் கொண்டார். கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள், வீடு வீடாகச் சோதனை, வைரஸ் தொற்றுக்கான அறிகுறி கொண்டவர்களுக்கு RTPCR சோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சை அளித்தல் எனப் பல்வேறு செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கொரோனா சிகிச்சைக்காக சிகிச்சை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 58,840 படுக்கைகள் உள்ளன. சிறப்பு மையங்களில் 77,223 படுக்கைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மேலும் ஆக்சிஜன் வசதிகளுடன் 26,801 படுக்கைகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். ICU வசதி கொண்ட 4,782 படுக்கைகளும் 5,718 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் இருப்பதகாவும் குறிப்பிட்டார். மேலும் நோயின் அதிகப் பாதிப்பு கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 2,882 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்திய அளவில் தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்பட்டுத்தப் பட்டுள்ளன. அதில் 63 அரசு ஆய்வகங்கள் மற்றம் 83 தனியார் ஆய்வகங்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை 43.73 லட்சம் நபர்களுக்கு RTPCR கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன எனவும் முதல்வர் குறிப்பிட்டுக் காட்டினார். இதனால் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது என்றும் முதல்வர் பெருமையோடு கூறினார். தற்போது நாளொன்றுக்கு தமிழகத்தில் 75 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்படுவதாகவும் தகவல் அளித்தார். தனியார் மையங்களில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணங்களை தமிழக அரசே நிர்ணயித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக கூடுதலாக தமிழகத்தில் 15 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள் மற்றும் இதரப் பணியாளர்களும் அடக்கம் என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார். மேலும் மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர்காக்கும் மருந்துகளான டொஸிலிசுமாப் (Tocilizumab) 400 எம்ஜி, ரெம்டிஸ்விர் (Remdesvir) 100 எம்ஜி, இனாக்சபெரின் (Enoxaparin) 40 எம்ஜி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மருந்துகள், பரிசோதனை கருவிகள், N95 முகக்கவசங்கள், CT ஸ்கேன், X-Ray இயந்திரங்கள் ஆகியவற்றை தேவையான அளவில் மாண்புமிகு அம்மாவின் அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகின்றது என்றும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய தமிழக முதல்வர், “களப்பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்களுக்கும், ஜிங்க் (Zinc) மற்றும் வைட்டமின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இந்திய முறை மருத்துவ (ayush) சிகிச்சையும் நோயாளிகளுக்கு சிறப்பாக அளிக்கப்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக சித்த மருந்தான கபசுர குடிநீர் பெரும்பான்மையான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நடவடிக்கைகளின் காரணமாக நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் (3,49,682 நபர்கள்) 84.45% மேல் உள்ள மாநிலமாகவும், மிக குறைவான, அதாவது 1.7% இறப்புள்ள மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மற்றும் அரசு காப்பீட்டு திட்ட பணியாளர்களுக்கு வேண்டுமெனில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நமது மாநிலத்தில் இருந்து 4,24,394 இடம் பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும், 80,779 வெளிநாட்டு வாழ் தமிழர்களை வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது திட்டத்தின்மூலம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை முறையாக கழுவுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ளது. பொது மக்களிடம் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்த வேண்டும். கோவிட் RTPCR பரிசோதனையின்போது மூத்த குடிமக்கள் மற்றும் இணைய நோய் உள்ளோரின் மாதிரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவித்தல் வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கோவிட் சிறப்பு மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அம்மையங்கள் பொது மக்களுக்கு மேலும் சிறப்பான சேவைகளை வழங்க உணவு, குடிநீர் கழிப்பிட வசதிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு குறைவான இறப்பு விகிதத்தை கொண்டு இருந்த போதிலும் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக இலவசமாக மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 46 லட்சம் மறுமுறை உபயோகிக்கத்தக்க முகக்கவசங்கள் சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில் இதுவரை 72.56 லட்சம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வேளாண் தொழிலுக்கு மட்டும் விலக்களித்து முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் ஏழைகள், சிறுதொழில் செய்வோர் போன்றோரின் பொருளாதார நிலை பாதிக்கப்படும் என்பதை அறிந்து அவர்களை பாதுகாக்க தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களை விலையின்றி வழங்கதல், ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்தியது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த மாண்புமிகு அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா காலத்தில் கூட இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 31,464 கோடி ரூபாய் முதலீடும் சுமார் 69,712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன.
இந்நடவடிக்கைகளால் ஏப்ரல் முதல் ஜுன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பதை ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், ஊரக தொழில்களை மேம்படுத்தவும் வருமானத்தைப் பெருக்கவும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1,40,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
இக்கொரோனா காலகட்டத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 1,53,576 சுய உதவிக் குழுக்களுக்கு 5,934 கோடி ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தனியே கொரோனா நோய்த்தொற்ற காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 67,354 சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 720 கோடி ரூபாய் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வருமானத்தை பெருக்கவும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம் (CORUS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனது தலைமையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டங்கள் நடத்தி, உடனுக்கு உடன் தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க அறிவுறுத்தியதனால் மத்திய அரசின் கடன் திட்டத்தில் மிக அதிக அளவில், அதாவது சுமார் 7,518 கோடி ரூபாய்க்கான ஒப்புதலினை பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால் அரசின் நலத்திட்டங்கள் மக்களை பெருமளவில் சென்று சேர்ந்து மக்களை பொருளாதார பாதிப்பில் இருந்து பாதுகாத்தன எனவும் வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில் ஆறில் ஒரு பங்காக சரிந்துள்ளது எனவும் தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது எனவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தற்போது பருவமழை காலம் தொடங்க உள்ளது. பருவ காலம் ஆரம்பிக்கும் முன்னதாகவே நகர்ப்புற/ ஊரகப் பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி பருவகால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நாம் முன்னரே திட்டமிட்டு நீர்நிலைகளை தூர் வாரியது, ஆழப்படுத்தியது வாய்க்கால்களை சீரமைத்தது போன்ற பணிகளினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு 4 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக 1,433 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6,278 நீர்நிலைகள் புணரமைக்கப்பட்டுள்ளன. போதிய அளவில் வேளாண் இடுபொருட்கள் இருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்கள். எனவே வேளாண் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வரலாறு காணாத அளவிற்கு இந்தாண்டு வோளண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், பருவ மழைக்கு முன்னதாகவே நீர்நிலை உட்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள் மற்றும் கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. விரைவில் பருவமழையும் துவங்க உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால் பகுதிகளை தூய்மைப்படுத்தி மழைநீர் வடிந்து செல்லதக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் டெங்கு கொசு உருவாக வாய்ப்பு ஏற்படும். டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதற்குஉகந்த நேரம் இதுதான்.
வரலாற்று சாதனையாக தமிழக அரசு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று மிகக் குறுகிய காலத்திலேயே அவற்றிற்கான கட்டுமானப் பணிகளை துவக்கி உள்ளது. அப்பணிகளை கள ஆய்வு செய்து பணியினை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.
அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பொதுமக்களுக்கும், செம்மையான முறையில் பணியாற்றி வருகின்ற அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்களின் நலன் கருதி உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொது மக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’‘ எனவும் முதல்வர் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com