கோரிக்கை மனுவை ஏற்று மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணி நேரத்தில் அரசாங்க வேலை… தமிழக முதல்வரின் அதிரடி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கடந்த 2018 ஜுன் மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டத்தொகை வழங்கப்பட்டது. மேலும் இழப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விபத்தில் பலியான குடும்பத்தைச் சார்ந்த 10 பேருக்கு முதலில் வேலைவாய்ப்புக்கான கடிதத்தை முதல்வர் வழங்கினார். அடுத்து விபத்தில் படுகாயமடைந்த 5 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 4 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டது. இப்படியாக இதுவரை தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 19 நபர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பை வழங்கி உள்ளது.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆய்வுக்குச் சென்ற தமிழக முதல்வரிடம் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் வெறுமனே 2 மணி நேரத்தில் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்.
தன்னிடம் மாற்றுத்திறனாளி பெண் கொடுத்த கோரிக்கை மனுவை அம்மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்து இந்த வேலைவாய்ப்பை உறுதி செய்தார் தமிழக முதல்வர். வெறுமனே 2 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் வார்டு மேலாளர் பணிநியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.
மேலும் தூத்துக்குடியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.16 கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார். மேலும் ரூ.71 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கட்டடத்தையும் திறந்து வைத்துள்ளார். அத்துடன் மாவட்டத்தில் ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments