மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகளை ஏற்ற வாட்ஸ்அப்… பதில் சொல்லாத டிவிட்டர்!
- IndiaGlitz, [Saturday,May 29 2021]
இந்தியாவில் மத்திய அமைச்சகம் வகுத்துள்ள டிஜிட்டல் ஒழுங்கு விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு சேவையைத் தொடருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் இந்த விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்து இருந்த நிலையில் டிவிட்டர் நிறுவனம் மட்டும் இந்த விதிமறைகளுக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகிறது.
இந்தியாவில் இயங்கும் சோஷியல் மீடியா, ஆன்லைன் செய்தி நிறுவனங்கள், ஓடிடி தளங்கள் போன்றவற்றை நெறிப்படுத்த மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டு இருந்தது. இந்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டி மத்திய அரசு 3 மாதம் காலஅவகாசம் அளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலக்கெடு மே 25 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மட்டுமே டிஜிட்டல் ஒழுங்கு விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக பதில் அளித்து இருந்தன. ஆனால் இந்த விதிமுறைகள் தனிமனித உரிமைப் பறிக்கும் விதமாக அமைந்து இருக்கிறது எனக் கூறி வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது.
இந்த வழக்கு குறித்து மத்திய அரசு சில விளக்கங்களை வெளியிட்டு இருந்தது. அதில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் செயல்பாடடிற்கு இந்த விதிமுறைகள் தடையாக இருக்காது என்றும் மக்களுக்கான பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே இந்த விதிமுறைகள் அமல்படுத்தப் படுகிறது எனவும் விளக்கம் அளித்து இருந்தது. இதையடுத்து தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் மத்திய அரசு கொடுத்துள்ள புதிய டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்று 3 அதிகாரிகளை நியமிக்க இருக்கிறது.
இதன்படி சட்ட அமலாக்கத் துறை தொடர்பான விவரங்களை மத்திய அரசு கேட்கும்போதெல்லாம் கொடுக்க வேண்டும். அதோடு சிக்கலான பதிவுகளை நீக்கச் சொல்லும்போது அவற்றை நீக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் மட்டும் புதிய ஒழுங்குமுறை விதியைக் குறித்து இதுவரை எந்த முடிவையும் வெளியிடாமல் இருந்து வருகிறது.