நடிப்புக்காக பிறப்பெடுத்த நடிகர் திலகம்… சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!
- IndiaGlitz, [Friday,October 01 2021]
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு அவருக்கு சிறப்பு செய்திருக்கிறது.
அக்டோபர் 1, 1928 ஆம் ஆண்டு சின்னையா மன்ராயர் –ராஜாமணி அம்மாளுக்கு 4 ஆவது மகனாக பிறந்தவர் சிவாஜி கணேசன். மேடை நாடகம் மூலம் தனது திறமையை வெளிக்காட்டத் துவங்கிய இவர் “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்“ என்ற நாடகத்தில் சிவாஜியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருந்தார். இதனால் அவரது நடிப்பை மெச்சிய தந்தை பெரியார் சிவாஜி“ கணேசன் என அழைக்கத் துவங்கினார். இதுவே பின்னாட்களில் பெயராகவும் நிலைத்துப்போனது.
அந்த அளவிற்கு நடிப்பின் ஊறித் திளைத்துப் போன நடிகர் திலகம் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை நடிப்புக்காக செலவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்த கேரக்டருடன் ஒன்றிப்போய் வீரியமான நடிப்பை வெளிப்படுத்துவார். அதேபோல கனத்த குரலுடன் இவர் பேசும் வசனங்களுக்காகவே பெரிதும் கொண்டாடப்பட்டார். பின்னாட்களில் வந்த சில நடிகர்களிடம் இவருடைய தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.
கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் கடந்த 1952 ஆம் ஆண்டு வெளியான “பராசக்தி“ திரைப்படத்தில் நடிக்கத் துவங்கிய இவர் 300க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், 9 தெலுங்கு திரைப்படம், 2 ஹிந்தி திரைப்படம், 1 மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர வரலாற்று நாயகர்களாக இவர் நடித்த “மனோகரா“, “ராஜ ராஜ சோழன்“, “கர்ணன்“, “வீரபாண்டிய கட்டபொம்மன்“, “கப்பலோட்டிய தமிழன்“ போன்ற கதாபாத்திரங்களுக்காக கொண்டாடப்பட்டார். அதேபோல புராணக்கதைகளான “திருவிளையாடல்“, “சரஸ்வதி சபதம்“ போன்ற திரைப்படங்களில் தெய்வகடாட்சம் பொருந்தியவராகவே மக்களுக்குக் காட்சி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
சில தெய்வப் படங்களில் நடிகர் சிவாஜியைப் பார்த்த மக்கள் உண்மையிலேயே கடவுள்தான் எனக் கொண்டாடவும் தொடங்கி இருந்தனர். நடிப்புக்காக செவாலியர் பட்டம், கலைமாமணி விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், தாதா சாகேப் பால்கே விருது போன்ற விருதுகளைப் பெற்ற இவர் நடிப்புக்காகவே பிறப்பெடுத்து இன்றைக்கும் மக்கள் மனதில் நீங்காமல் கொண்டாடப்பட்டு வருகிறார்.
நடிகர் திலகத்தின் 93 ஆவது பிறந்தநாளை ஒட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டு மரியாதை செய்திருக்கிறது.