அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!!! தமிழக அரசின் புது நடவடிக்கை!!!
- IndiaGlitz, [Wednesday,July 15 2020]
தமிழக அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ இட ஒதுக்கீட்டில் இடம் பிடிப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. இக்குறைபாட்டை சரிசெய்வதற்காக தற்போது தமிழக அரசு புது நடவடிக்கையை எடுத்திருக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் தேர்ச்சிப் பெறும் மாணவர்கள் நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்று இருந்தால் அவர்களுக்கு மருத்து இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற முடிவை தமிழக அரசு எடுத்து இருந்தது. அதன்படி எத்தனை விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
அந்தக்குழு அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவ சேர்க்கையில் இடம்பிடிப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் எனப் பரிந்துரை செய்தனர். இந்த அறிக்கையை விவாதித்த தமிழக அரசு தற்போது 7.5 விழுக்காடு அளவிற்கு மருத்துவச் சேர்க்கையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என முடிவு செய்திருக்கிறது. இந்த கருத்தை தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதித்து முடிவு எட்டப்பட்டு இருக்கிறது. இனிமேல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் பள்ளி மாணவர்கள் MBBS, BDS போன்ற மருத்துவப் படிப்புகளின் சேர்க்கையின் போது 7.5% தனி உள் ஒதுக்கீடு பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதைப்போல 1-8 வகுப்பு வரை தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயின்று பின்பு அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சிப் பெற்று இருந்தாலும் அவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சலுகைக்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. தற்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கையால் மருத்துவ சேர்க்கையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை 400 சீட்டாக உயரும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.