திருச்சியில் ஒரு 'கனா' கெளசல்யா: குவியும் பாராட்டுக்கள்
- IndiaGlitz, [Tuesday,April 23 2019]
தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 800 போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுதான் என்பது குறிப்ப்பிடத்தக்கது. திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த கோமதி, இன்று ஒரே நாளில் உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டார்.
ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்த கோமதி மாரிமுத்து 20 வயது முதல் தடகள பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 7வது இடம்பிடித்த கோமதி அதன்பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4வது இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 2.70 வினாடிகளில் கடந்து சாதனை செய்துள்ளார். இந்த வெற்றியை என்னால் நம்பவே முடியவில்லை என்றும், கடைசி 150 மீ தூரம் ஓடுவது கடினமாக இருந்ததாகவும் கோமதி மாரிமுத்து கூறினார்.
கோமதி தாய்நாட்டிற்காக தங்கம் வென்ற செய்தி உலகம் முழுவதும் பரவியிருந்தாலும் அவரது கிராமத்தில் உள்ள அவரது தாயார் ராசாத்திக்கு தெரியாமல் இருந்துள்ளது. அவரது கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி டிவியில் செய்தியை பார்த்து கூறியபின்னரே தனது மகளின் சாதனை அவருக்கு தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான 'கனா' திரைப்படத்தில் எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்த கெளசல்யா கேரக்டர் போல் ஒரு நிஜ கெளசல்யா உள்ளது தற்போது தெரிய வந்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டு வருகின்றனர்.