பேஸ்ட் வடிவில் தங்கக் கடத்தல்… கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!!!
- IndiaGlitz, [Thursday,November 12 2020]
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கோவை விமான நிலையித்தில் பேஸ்ட் வடிவில் மாற்றப்பட்டு தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சார்ஜாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 2 பயணிகள் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து இந்தியா வந்த பயணிகளை வழக்கம்போல கலால்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான 2 பயணிகள் அவர்களுடைய இடுப்பில் பேஸ்ட் போல மாற்றப்பட்ட ஏதோ ஒரு பொருளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை செய்த கலால் துறை அதிகாரிகள் அது தங்கம் எனக் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 62 லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை வருவாய்த் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த மேலும் 5 பேரிடம் வரி செலுத்தப்பட்ட தங்கம் இருப்பதையும் கலால் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்தத் தங்கத்திலும் ஏதோ முறைகேடு இருப்பதாகச் சந்தேகித்த கலால்துறையினர் மேலும் 46 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனால் ஒரே நாளில் 1.9 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை விமான நிலையத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.