காபி பிளாஸ்கில் 4 கிலோ தங்கம் கடத்திய பெண்கள்… கூட்டமாக சிக்கிய சம்பவம்!

  • IndiaGlitz, [Tuesday,December 21 2021]

கொன்யாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சிவாஜி மகாராஜா விமான நிலையத்தில் வந்திறங்கிய 18 கென்ய நாட்டு பெண்களிடம் இருந்து 3.8 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் காபி பிளாஸ்கில் தங்கத்தைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

நைரோபியில் இருந்து ஷார்ஜா வழியாக மும்பை வந்த விமானத்தில் 18 கென்ய பெண்கள் கூட்டமாகப் பயணம் செய்துள்ளனர். இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது காபி பிளாஸ்க், மாசாலா பாட்டில்கள், உள்ளாடை, காலனி போன்றவற்றில் மறைத்து 3.8 கிலோ தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 1.55 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் கென்யாவில் இருந்து குறைந்த விலைக்கு தங்கத்தை வாங்கி மும்பையில் இவர்கள் விற்று வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தை முன்னிட்டு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி ஒரு பெண்ணை மட்டும் கைது செய்துள்ளனர். மேலும் மற்றவர்களிடம் இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல கடந்த மாதம் மும்பை விமான நிலையத்தில் 77 லட்சம் மதிப்புள்ள 1.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தவிர ஹைத்ராபாத் விமான நிலையத்தில் 3.6 கோடி மதிப்புள்ள 7.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக தங்கம் கடத்தும் செயல்கள் மேலும் அதிகரித்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.