தமிழ்நாட்டில் பிரபல சோப் கம்பெனியின் தொழிற்சாலை.. 50% பெண்களுக்கு 5% மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை..!

  • IndiaGlitz, [Monday,January 08 2024]

இந்திய அளவில் சோப்பு விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் கோத்ரேஜ் நிறுவனம் தனது புதிய சோப் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க இருப்பதாகவும் இந்த தொழிற்சாலையில் 50 சதவீதம் பெண்களுக்கும் 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடந்து வரும் நிலையில் பிரபல இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன. மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா கோத்ரேஜ் அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தங்களுடைய புதிய சோப் தொழிற்சாலையை தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டில் அமைக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த தொழிற்சாலையில் பெண்களுக்கு 50% வேலை வாய்ப்புகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% வேலை வாய்ப்புகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும் கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா, மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அமையவுள்ள கோத்ரெஜ் புதிய சோப் நிறுவனத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு என்ற அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.