ஒரே முத்தத்தில் கொரோனாவை விரட்டுவதாக கூறிய சாமியார் கொரோனாவுக்கு பலி!
- IndiaGlitz, [Saturday,June 13 2020]
ஒரே முத்தத்தில் கொரோனாவை விரட்டுவதாக பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி முத்தம் கொடுத்து வந்த சாமியார் ஒருவர் அதே கொரோனாவுக்கு பலியாகி இருக்கும் சம்பவம் ஒன்று மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் ஆசிரமம் அமைத்து கடந்த சில ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்தார். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தன்னிடம் வந்து ஒரே ஒரு முத்தம் பெற்று சென்றால் அவர்களுக்கு கொரோனா வராது என்று அந்த சாமியார் கூறியதாக தெரிகிறது
இதனை நம்பிய அந்த பகுதி மக்கள் அந்த சாமியாரை தேடி வந்து முத்தம் பெற்று சென்றனர். அவ்வாறு முத்தம் பெற்றவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா இருந்ததால் அந்த கொரோனா சாமியாரையும் பற்றிக்கொண்டது. இதனை அடுத்து சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சாமியாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, இதனை அடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்
இந்த நிலையில் அந்த சாமியாரிடம் முத்தம் பெற்றவர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் மத்திய பிரதேச மாநில சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சாமியாரிடம் முத்தம் பெற்ற 80க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரொனாவை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் முத்தம் பெற்றால் கொரோனா வராது என்று நம்பிய அப்பாவி மக்களால் மத்தியபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது