சுடோக்கு புதிர் விளையாட்டின் காட்பாதர் காலமானார்: நடிகை கஸ்தூரி இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

உலகம் முழுவதும் சிறியவர் முதல் பெரியவர் வரை விருப்பத்துடன் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று சுடோக்கு என்ற புதிர் விளையாட்டு. இந்த விளையாட்டின் காட்பாதர் என்று அழைக்கப்படும் மகி காஜி என்பவர் காலமானார். அவருக்கு வயது 69.

ஜப்பான் நாட்டை சேர்ந்த மகி காஜி கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுடோக்கு என்பது 9x9 என்று அமைந்த 81 ஒரு சிறு கட்டங்களில் அடங்கிய ஒரு விளையாட்டு ஆகும். ஒரு குறிப்பிட்ட கூட்டுத்தொகை வருமாறு எண்களைக் கொண்டு விளையாடும் இந்த புதிர் விளையாட்டை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலர் என்பவர் கண்டுபிடித்தார்.

இந்த விளையாட்டின் நவீன வடிவம் அமெரிக்காவின் முறைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் 1980ஆம் ஆண்டு இந்த விளையாட்டை பிரபலப்படுத்தியவர் மகி காஜி என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு எண்ணும் ஒற்றையாக இருக்கவேண்டும் என்று பொருள்படும் ஜப்பானிய சொற்றொடர் தான் சுடோக்கு என்பதாகும்.

இந்த நிலையில் சுடோக்கு விளையாட்டு காட்பாதர் மகி காஜி அவர்களின் மறைவை அடுத்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.