போலீசாருக்கே வாளை காட்டி எச்சரித்த பெண் சாமியார்: போலீஸ் எடுத்த நடவடிக்கை

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி மக்களை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வைப்பது ஒன்றுதான். இதனை மத்திய மற்றும் மாநில அரசுகள் மிக தீவிரமாக கடைபிடிக்க பொது மக்களை அறிவுறுத்தி வருகின்றன.

ஆனால் கொரோனா வைரஸின் சீரியஸ் தெரியாமல் இன்னும் ஒரு சிலர் சாலைகளில் நடமாடியும் வாகனங்களில் சென்று கொண்டும் உள்ளனர். இருப்பினும் அவர்கள் போலீசாரால் எச்சரிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பெண் சாமியார் ஒருவர் தனது ஆசிரமத்தில் 50க்கும் அதிகமானவர்களை கூட்டி பிரார்த்தனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அனைவரையும் கலைந்து போகும்படி எச்சரித்தனர். ஆனால் அந்த பெண் சாமியார் திடீரென வீட்டில் இருந்து வாளை எடுத்துவந்து போலீசாருக்கு பதில் எச்சரிக்கை கொடுத்தார்.

இதனை அடுத்து அதிரடியாக களம் இறங்கிய போலீசார் பக்தர்கள் மத்தியில் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். அதன் பின்னர் பெண் சாமியாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க கூட்டம் போடக்கூடாது என்ற அடிப்படை கூட தெரியாமல் 50 பேருக்கு மேல் கூட்டி பிரார்த்தனை நடத்தி வந்த பெண் சாமியார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.