கோவா நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு
- IndiaGlitz, [Thursday,March 16 2017]
சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் ஒன்று கோவா. இந்த மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதி கிடைக்கவில்லை. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றதால் சிறு கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. இருப்பினும் சட்டமன்றத்தில் மார்ச் 16ஆம் தேதி அரசின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சற்று முன்னர் கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் முதல்வர் மனோகர் பாரிக்கர் அரசு வெற்றி பெற்றது. 22 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் பாரிக்கருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் அடங்குவர். அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் 16 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தற்போது எம்.எல்.ஏ ஆக இல்லை என்பதால் அடுத்த ஆறு மாதங்களில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.