அன்புச்செழியன் வீட்டுக்கு ரெய்டு போங்க: அரசுக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள்
- IndiaGlitz, [Wednesday,November 22 2017]
பைனான்சியர் அன்புச்செழியனின் மிரட்டல் காரணமாக நேற்று இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது அன்புச்செழியனால் திரையுலகில் உள்ள பலர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த லிஸ்ட்டில் அஜித், லிங்குசாமி, கவுதம் மேனன், டி.இமான் என நீண்டு கொண்டே போவதால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
அசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிமாவில் கடைசி மரணமாக இருக்க வேண்டும். 'நான் கடவுள் நேரத்தில் இந்த அன்புச்செழியனால் அஜித் அவர்களும் அசோக் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் லிங்குசாமி, கவுதம்மேனன் மற்றும் தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேர், பல நடிகர்களும் இந்த அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் இமான் இசையமைப்பாளரிடம் கூட எந்த படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று மறைமுகமாக சிரித்து கொண்டே கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்கு காரணமாக அன்புச்செழியன் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுக்கும், வருவாய்த்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதிப்பணம் அன்புவிடம் இருக்கும். தயவுசெய்து அவர் வீட்டிலும் ரெய்டு செல்லவும்' என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.