தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து விலகியது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என்று ஒருபக்கம் உள்ளிருப்பு போராட்டம் நடந்த நிலையில் இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து ஞானவேல்ராஜா விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் இந்த ராஜினா என்று அவர் விளக்கமும் அளித்துள்ளார். இதுகுறித்து ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஞானவேல்ராஜாவாகிய நான் ஸ்டூடியோ கிரீன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். திரைத்துறையில் எனது நிறுவனமும் ஒரு அங்கமாக உள்ளது என்று சந்தோசப்படும் சூழ்நிலையில், தற்போது திரைத்துறை இல்லை என்பதை சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே. திரைத்துறை நண்பன் அசோக்குமாரின் தற்கொலை என்னை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது.
எனது நண்பன் அசோக்குமார் நேரடியாகத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் திரைத்துறையைச் சார்ந்த பல நண்பர்கள் நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என நினக்கும் போது எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது என்பதோடு அதற்கான காரணம் என்னை கொதிப்படைய வைத்துள்ளது. அதற்கான காரணத்தை அலசி ஆராயும் போது திரைத்துறை சார்ந்த சங்கங்கள் ஒரு சில நபர்களின் கையில் சென்று கொண்டிருப்பதுடன், ஒருசில பேரின் கைப்பாவையாக சங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிய வருகிறது. ஆயிரக்கணக்கான சினிமா நண்பர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பது திரைத்துறையைச் சார்ந்த ஒருசில நபர்கள்தான் என்பது திரைத்துறையைச் சார்ந்த அனைவருக்கும் தெரிந்தும் வெளியில் சொல்ல அச்சப்பட்டும், கூச்சப்பட்டும் கொண்டிருக்கிறார்கள். இதை நினைக்கும் போது வேதனைப் படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சராசரி மனிதனாக ஒதுங்கிக் கொள்ள முடியவில்லை.
எனவே திரைத்துறையின் நலன் காக்கவும் நண்பர் அசோக்குமார் போல தற்கொலைகள் இனியும் நடக்கக்கூடாது என உறுதி ஏற்று, வருகிற டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுகின்ற சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன்.
அதற்குச் சங்க விதிப்படி தடையாக உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் பதவியை திரைத்துறையின் நலனுக்காகவும் இனி ஒரு துர்மரணம் நிகழக்கூடாது என நினைத்து அப்பதவியை ராஜினாமா செய்து மாபெரும் வேள்வியில் குதித்துள்ளேன்.
இதில் பல்வேறு இடையூறுகளும், அச்சுறுத்தல்களும் வந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும், அதுபற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. ஏனெனில் ஒட்டுமொத்த திரைத்துறையும் எனக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த வேள்வியில் இறங்கியுள்ளேன். எனவே தனிப்பட்ட ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவு என்று கருதாமல் திரைத்துறை சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் என்னை கவுரவ செயலாளராக தேர்ந்தெடுத்த அனைத்து தயாரிப்பாளர் சகோதரர்களுக்கு இத்தருணத்தில் பாதம் தொட்டு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 8 மாதங்களில் என்னால் முடிந்தவரையில் கொடுத்த வாக்குறுதிகளைக் நிறைவேற்ற பாடுபட்டுள்ளேன். ஒன்பது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சிறு படங்களுக்கான அரசு மானிய அறிவிப்பு, மற்றும் மாதாமாதம் அன்புத்தொகை மற்றும் இன்சூரன்ஸ் வழங்குதல் ஆகிய செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது என்பதை யாரும் மறுக்க இயலாது.
கேபிள் டிவி மற்றும் மற்ற ஊடகங்கள் மூலம் சங்கத்துக்கு நிரந்தர வருமானம் ஈட்ட வழிவகைகள் ஓரிரு மாதங்களில் ஆரம்பமாகி விடும். சங்க வளர்ச்சி நிதி, உறுப்பினர்களுக்கான நிலம் வழங்குதல், ஆகிய பணிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்ட திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் இல்லாத நலத்திட்டங்களும், தொழில் வளர்ச்சியான வழிகாட்டுதலும், இந்த 8 மாத காலத்தில் பல நிகழ்வுகளைக் கூறலாம்.
எனக்கு உறுதுணையாக இருந்த பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வரும் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன். உங்கள் எல்லாருடைய அன்பும், ஆசீர்வாதமும், எங்கள் அணிக்கு வேண்டுமென இறைவனைப் பிரார்த்தித்து கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஞானவேல்ராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments