இந்தி மொழி குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய கருத்து!

  • IndiaGlitz, [Friday,September 27 2019]

இந்தியா முழுவதும் பரவலாக பரவியிருக்கும் இந்தி மொழி, தமிழகத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக நுழைய முடியாத வகையில் உள்ளது. அதற்கு திராவிட கட்சிகளின் தீவிர எதிர்ப்பு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு முறை மட்டுமே தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் மத்திய அரசு தற்போது தீவிரமாக இந்தி மொழியை தமிழகத்தில் புகுத்த முயற்சித்து வருகிறது. இருப்பினும் திராவிட கட்சிகள் அதற்கு பதிலடி கொடுத்து இந்தியை நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை அரசியல் கட்சிகள் நடத்தி வந்தாலும் இதுவரை மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரியவில்லை. இதனால் இந்தி மொழியை வைத்து அரசியல் கட்சிகள் லாபம் தேடுகின்றனவா? என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்கின்றது.

இந்த நிலையில் இந்தி மொழியை கற்றுக்கொள்வது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியபோது, ‘மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை, மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதில் தவறு இல்லை என்று கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு பயன்படுகிறதா? என்று பார்க்காமல் இதை வைத்து அரசியல் அரசியல் செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொதுமொழி ஒன்று இருப்பது அவசியம், ஒரு மொழி இருப்பதால் இன்னொரு மொழி அழியும் என்ற பிரச்சாரம் ஒரு கும்பலால் தவறாக பரப்பப்படுகிறது. 90% தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரிவதில்லை. அதற்கு மொழியும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.

ஞானவேல் ராஜாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதள பயனாளிகள் ஆதரவு, எதிர்ப்பு என மாறி மாறி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு கூறும் ஒரு விஷயத்தை தப்பித்தவறி ஆதரவு தெரிவித்தால் உடனே அந்த நபருக்கு பாஜக முத்திரையை குத்துவது சமூக வலைதள சமூக வலைதள பயனாளர்களின் வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஞானவேல்ராஜாவுக்கும் அதே முத்திரை குத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.