இதற்குமுன் தோன்றிய உலகளாவிய தொற்றுநோய்கள்!!! விரிவான தொகுப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,April 25 2020]

 

 

பொதுவாக தொற்று நோயின் அளவைக் குறிக்க சில குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தொற்றுநோய் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் மட்டும் வருவது அல்லது ஒருசில இடங்களில் ஆண்டுதோறும் வழக்கமான அளவுக்குள் பாதிப்பை ஏற்படுத்துவது வட்டார நோய் (Endemic) எனப்படும். எப்போதாவது குறிப்பிட்ட அளவைக் கடந்து திடீரென்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்போது கொள்ளைநோய் (Epidemic) என்று குறிப்பிடுகிறார்கள். அந்த கொள்ளைநோய் குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் மட்டும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தினால் அது (Outbreak) எனப்படுகிறது. அதே கொள்ளைநோய் நாடுகளைத் தாண்டி, கண்டங்களைத் தாண்டி பரவும்போது அதை உலகளாவிய தொற்றுநோய் அல்லது உலகளாவிய பெருந்தொற்று (Pandemic) என்கிறார்கள். தற்போது உலகம் முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் உலகளாவிய நோய்த்தொற்று எனக் குறிப்பிடப்படுகிறது. இதற்குமுன் உலகில் பல நோய்கள் உலகளாவிய பெருந்தொற்றுகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அவைகளுள்,

எய்ட்ஸ் – முதன்முதலாக ஜுன் 5, 1981 ஆம் ஆண்டு அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் ஓரினச்சேர்க்கையாளருக்கு வரும் நோயாக கருதப்பட்டதால் இந்நோயை கிரிட் என்ற சொல்லால் அடையாளப்படுத்தினர். பின்பு இந்நோய் ஓரினச் சேர்க்கையாளருக்கு மட்டும் உரியதல்ல எனக் கண்டறியப்பட்டு 1982 ஜுலையில் எய்ட்ஸ் எனப் பெயரிடப்பட்டது. பல காலக்கட்டங்களில் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் 2005 முதல் 2012 வரை உலகளாவிய பெருந்தொற்றாக எய்ட்ஸ் வைரஸ் பரவியிருக்கிறது. எனவே இக்காலக்கட்டங்களில் இந்நோய் Pandemic பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்ஃளுவென்சா – இந்நோய் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பரவும் கொள்ளை நோயாக இருப்பது இல்லை. இது அடிக்கடியும் வருவதில்லை என்றாலும் பல நேரங்களில், பல நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட எசுப்பானிய இன்ஃபுளுவென்சா காய்ச்சலால் ஏறக்குறைய 50 மில்லியன் மக்கள் இறந்தார்களாம். அடுத்து 1957 இல் தோன்றிய ஆசிய இன்ஃபுளுவென்சா சுமார் 2 மில்லியன் மக்களை காவு வாங்கியிருக்கிறது. 1968 இல் உலகம் முழுவதும் ஆங்காங்கு ஏற்பட்ட காய்ச்சலால் 1 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்திருக்கிறது. கடைசியாக 2009 இல் இந்த காய்ச்சல் பரவியிருக்கிறது. இத்தகைய பரவல் நேரங்களில் பல முறை இந்நோய் உலகளாவிய பெருந்தொற்றாகவும் (Pandemic) அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் 1889-1890 உலகளாவிய பெருந்தொற்றாக இந்நோய் பரவியிருக்கிறது. இந் நூற்றாண்டில் 1968, ஆசிய ஃபுளு 1957, ஸ்பானிய ஃபுளு 1918 போன்ற ஆண்டுகளில் பெருந்தொற்றாகவும் இந்நோய் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

காலரா – உலகத்தில் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்திய முக்கிய நோய்களுள் ஒன்றாக காலரா இருந்துவருகிறது. இந்நோய் கடந்த நூற்றாண்டுகளில் கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்தது. இந்நோயைக் கட்டுப்படுத்தவும் அதிக காலம் எடுத்துக்கொண்டது. 1852 முதல் 1860 காலரா உலகளாவிய பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது. மேலும், 1910 முதல் 1923 வரை பெருந்தொற்றாக பரவி அதிகபாதிப்புகளை ஏற்படுத்தியது.

பிளேக் – மனித குலத்திற்கு அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பை ஏற்படுத்திய மற்றொரு நோய் பிளேக். இந்நோயின் வரலாறு கி.பி. யில் இருந்தே தொடங்குகிறது. கி.பி. 165 இல் அன்டோனை பிளேக் நோய் ஐரோப்பா, ஜெர்மனி எனப் பலநாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அடுத்து ஜஸ்டினியன் பிளேக் 541 முதல் 542 வரை உலகில் பெருந்தொற்றாக பரவியது. 1346 முதல் 1353 வரை பூபானிக் பிளேக் இதே போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக மக்கள் தொகையில் கால் வாசிப்பேரை சென்ற நூற்றாண்டுகளில் இத்தகைய தொற்று நோய்களில் இழந்திருக்கிறோம். பாதிப்புகள் அதிகமாகும்போது அது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனா தற்போது நம்மை இதேபோன்ற நிலைமைக்கு தள்ளியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.