மனித குடலில் இருந்த கண்ணாடி டம்ளர்? மருத்துவர்களே அதிர்ந்துபோன சம்பவம்!
- IndiaGlitz, [Monday,February 21 2022]
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்குக் கடுமையான வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கல் ஏற்பட்டதையடுத்து மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் இருந்து கண்ணாடி டம்ளரை அறுவை சிகிச்சைமூலம் அகற்றியிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் மஹுவா பகுதியைச் சேர்ந்த 55 வயதான நபர் ஒருவர், தான் கண்ணாடி டம்ளரை விழுங்கிவிட்டேன், அதனால் கடுமையான வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது எனக் கூறி முசாப்பூர் பகுதியிலுள்ள மருத்துவமனையை நாடியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன மருத்துவர்கள் ஸ்கேன் செய்து அந்த நபரைப் பரிசோதித்துள்ளனர். மேலும் உண்மையில் அந்த நபரின் குடலில் கண்ணாடி டம்ளர் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து எண்டோஸ்கோபி அறுவைச் சிகிச்சை மூலம் அந்த நபரின் மலக்குடலில் இருந்து கண்ணாடி டம்ளர் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் குறுகிய வழியைக் கொண்டிருக்கும் உணவு குழாயில் எப்படி ஒரு கண்ணாடி டம்ளர் நுழைந்திருக்கும் சந்தேகத்தை மருத்துவர்கள் எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்த நபரிடம் கேட்டபோது டீ குடிக்கும்போது அப்படியே விழுங்கிவிட்டேன் எனக் கூறி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து உண்மையில் ஒரு மனிதன் டம்ளரை விழுங்க முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தனியுரிமையை காரணம் காட்டி இதுகுறித்த அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் பேச மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.