திருமணத்தை மறுத்து வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்… 7 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை!!!

  • IndiaGlitz, [Wednesday,September 16 2020]

 

உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் திருமணத்தை மறுத்து வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், 7 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று மீண்டும் வீட்டிற்கு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று இருக்கிறது. மிரட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனது UG படிப்பை முடித்தார் சஞ்சுராணி வர்மா என்ற இளம்பெண். பின்னர் லட்சியக் கனவை நோக்கி டெல்லி பல்கலைக் கழகத்தில் தனது முதுகலைப் படிப்பைத் தொடர்ந்து இருக்கிறார்.

அந்நேரத்தில் அவரது தயார் இறந்ததாகக் கூறப்படுகிறது. எனவே வீட்டின் சூழ்நிலை கருதி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சஞ்சு ராணியை அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி இருக்கின்றனர். கிராமத்து சூழ்நிலையில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இதுபோலத்தான் கனவை குறித்து யோசிக்கவே இடம் கிடைப்பதில்லை. வீட்டில் ஒரு கஷ்டம், அசம்பாவிதம் என எது நடந்தாலும் பெண்ணின் திருமணத்தைக் குறித்துத்தான் பேச்சுவரும்.

அதுபோலவே சஞ்சு ராணிக்கும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அதிர்ந்துபோன அவர் உடனே வீட்டை விட்டு துணிச்சலாக வெளியேறி இருக்கிறார். படிப்பிற்கு பணமில்லாமல் முதுகலைப் படிப்பையும் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வீட்டிலேயே பள்ளி குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து சம்பாத்தியத்தை தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் தனியார் பள்ளி ஒன்றிலும் ஆசிரியராக பணியாற்றி அதிலும் சம்பாதித்து இருக்கிறார்.

மேலும் கூடவே சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தன்னை கடுமையாகத் தயார் செய்திருக்கிறார் சஞ்சு ராணி. பல வருடங்களாக தேர்வு எழுதிய இவர் கடந்த 2018 இல் நடைபெற்ற உத்திர பிரதேசத்தின் மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இத்தேர்வுக்கான முடிவு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப் பட்டதால் தேர்வு முடிவை பார்த்த உடனே வெற்றி களிப்போடு சொந்த ஊருக்கும் சென்றிருக்கிறார் சஞ்சுராணி. தன்னை முடக்கிப் போடும் சூழலை தட்டிக் கழித்து சாதனை படைத்துள்ள இவருக்கு பலரும் தற்போது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.