கேராளாவில் வரதட்சணை கொடுமையால் தொடரும் மணப்பெண் தற்கொலைகள்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
"கடவுளின் தேசம்", இயற்கை அழகு பொருந்தும் மாநிலம் என்று பரவலாக கேரளா அழைக்கப்பட்டு வந்தாலும், அங்கு வரதட்சணை கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது. அண்மையில் கடந்த சில மாதங்களாக விஸ்மயா, அர்ச்சனா, ஆதிரா, சுசித்ரா போன்ற பெண்கள் புகுந்த வீட்டில் வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல், தற்கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இதுகுறித்து பேசினாலும், மணப்பெண்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் கொடுமை இன்னும் நீண்டு கொண்டேதான் வருகிறது.
கேரள மாநிலத்தில், கன்னூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த விஜீஷ் என்பவருக்கும், சுனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கல்யாணம் நடந்த நாளிலிருந்தே பெண்ணை மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு, தினமும் கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மாமியார் மற்றும் கணவர் இணைந்து அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் உறவினர்களிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாத அவர்கள், எப்பவும் போல கணவன், மனைவி பிரச்சனை என கண்டும், காணாததும் போல இருந்துள்ளனர்.
இதேபோல அண்மையில் மாமியார், மருமகளை கடுமையான வார்த்தைகளால் வசைபாடியும், அடித்தும் கொடுமை செய்துள்ளார். இதனால் மனது பாதிக்கும் அளவிற்கு சென்றுள்ளார் சுனிதா. இந்த கொடுமைகளை தாங்கமுடியாமல் கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் சுனிதா. இறப்பதற்கு முன் தனது தம்பிக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் "இந்த ஆடியோவை நீங்கள் கேட்கும் போது நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது. ஆனால் முடிந்தால் என்னை காப்பாற்றி, உங்கள் உடன் அழைத்து சென்று விடுங்கள். உங்கள் கூட வர நான் தயாராக உள்ளேன். மாமியாரும், கணவரும் என்னை அடித்து கொடுமைபடுத்துகிறார்கள்" என்று உருக்கமாக பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments