பட்ஜெட்டை விட 10 மடங்கு வசூல் செய்த 'கில்லி'.. ரீரிலீஸில் இப்படி ஒரு சாதனையா?
- IndiaGlitz, [Friday,May 03 2024]
கடந்த 2004 ஆம் ஆண்டு ’கில்லி’ படம் எடுக்க செலவான பட்ஜெட்டில் இருந்து தற்போது அந்த படம் 10 மடங்கு வசூல் செய்ய உள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், த்ரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான ’கில்லி’ திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான போது அந்த படம் அப்போதே 50 கோடி ரூபாய் வசூல் செய்தது. மேலும் 50 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டு இந்த படத்தை 8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய போது தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் இந்த படத்திற்கு தான் அதிக அளவு செலவு செய்ததாகவும் ஆனாலும் இந்த படத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது 20 ஆண்டுகள் கழித்து ’கில்லி’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் முதல் நாளே அபார வசூல் செய்தது என்றும் தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் 30 கோடி ரூபாயை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.
படம் ரிலீஸ் ஆனபோது ஒரு 50 கோடி ரூபாய், ரீரிலீஸில் ஒரு 30 கோடி ரூபாய் என மொத்தம் 80 கோடி ரூபாய் இந்த படம் வசூல் செய்திருப்பதாகவும், 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 10 மடங்கு வசூல் செய்திருப்பது தமிழ் திரை உலகில் ஆச்சரியத்தக்க ஒன்றாகும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.