கஜினிகாந்த் - 'ஏ' இயக்குனரின் 'யு' முயற்சி
தமிழில் வந்த முழு நீள அடல்ட் காமடி படங்களின் பிதா மகன் சந்தோஷ் பி ஜெயக்குமார் நகைச்சுவையுடன் கூடிய ஒரு குடும்ப படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதில் பாதி கிணறை தாண்டியும் இருக்கிறார் என்றே கூற வேண்டும்.
நாயகன் கஜினிகாந்த் , ஆர்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞாபக மறதி உள்ள கல்லூரி பேராசிரியராக நடித்த தர்மத்தின் தலைவன் தியேட்டரில் பிறந்ததால் அவர் மாதிரியே முக்கிய விஷயங்களை கூட ஒரு சில்லறை விஷயத்துக்காக மறக்கும் வியாதி கொண்டவர். பரத நாட்டிய ஆசிரியை சயீஷாவை கண்டவுடன் காதல் கொள்கிறார். தன் வியாதியால் தனக்கு கல்யாணமே ஆகாது என்று தந்தையே சொல்லிவிட்ட பிறகு எப்படியாவது இந்த தேவதையை அடைய வேண்டும் என்பதற்காக பல நாடகங்கள் ஆடி தன் காதலை கை கூட வைக்கிறார். மகளின் காதல் தெரியாமலே சம்பத்ராஜ் முன்பொருமுறை ஆர்யாவை மாப்பிள்ளை பார்க்க சென்று அவரின் ஞாபக மறதியால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி அவரை வெறுக்க ஆரம்பிக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரிக்கு பெண்ணை பேசியும் முடிக்கிறார். ஆர்யாவுக்கு தன் வியாதி போதாதென்று அந்த போலீஸ் கார மாப்பிள்ளையும் வில்லனாக எப்படி இரண்டையும் சமாளித்து காதலியை கை பிடிக்கிறார் என்பதே மீதி கதை.
தெலுங்கில் நாணி செய்த கதாபாத்திரத்தில் ஆர்யா சுலபமாக தன் அனுபவ எதார்த்த நடிப்பால் மெருகேற்றி இருக்கிறார். அப்பாவியாக காதலியிடம் பல விஷயங்களை மறந்து விட்டு அதை சமாளிக்க தான் ஒரு சமூக அக்கறை உள்ள ஆள் என காட்டிக்கொள்ள அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ரசிக்க வைக்கின்றன. கடைசியில் நீண்ட நேரம் ஓடும் ஒரே ஷாட்டில் உணர்ச்சியில் வெடித்து அழுது புலம்பும்போதும் ஸ்கோர் செய்கிறார். நடனத்தில் வேறு லெவல் மாஸ் காட்டும் சயீஷா தமிழ் வசனங்களை மெனக்கெட்டு சரியாக பேசியதால் இரவல் குரல் கொடுத்தவர்க்கும் நமக்கும் வழக்கமாக வரும் சங்கடங்கள் இல்லாமல் பார்த்து கொள்கிறார். அவர் பாத்திர படைப்புதான் அதே அலுத்து போன லூசு பெண்ணாக வடிவமைக்கப்பட்டது தமிழ் படம் மூன்றாம் பாகத்துக்கு பொருந்துவது போல் உள்ளது. படத்தில் காமெடியில் பெரிதாக சிக்ஸர் அடிப்பவர்கள் குணச்சித்திர நடிகர்களான உமா பத்மநாபன் மற்றும் ஆடு காலம் நரேன் ஆகியோர்தான். அதுவும் சம்பத்ராஜை சமாளிக்க உமா கணவரான நரேனை அண்ணா என்று அழைப்பதும் அவர் புலம்பி தவிப்பதும் தியேட்டரில் எழும் அசல் கரகோஷத்துக்கு காரணம்.காலி வெங்கட்டும் மதுமிதாவுக்கு இரண்டாம் பாகத்தில் வந்து கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். மொட்டை ராஜேந்திரனையும் கருணாகரனையும் அநியாயத்துக்கு வீணடித்திருக்கிறார்கள். சதிஷ் வழக்கம் போல் எதார்த்தம் இல்லாமல் செயற்கை தனமாக கவுண்டர் கொடுத்து பல இடங்களில் படுத்தி எடுத்தாலும் அந்த ஆள் மாறாட்ட காட்சியில் வசனங்களின் துணையால் தப்பிக்கிறார். சம்பத்ராஜும் வில்லனாக வரும் லிஜிஷும் குறையில்லாமல் தங்கள் பாத்திரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆர்யா சாயெஷா இடையேயான காட்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன அதே மாதிரி தான் ஆர்யாவுக்கும் அவர் பெற்றோர் உமா மற்றும் நரேனுடனான காட்சிகளை சொல்லலாம். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் காமடி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகிறது. இயக்குனரின் முந்தைய படங்களை ஒப்பிடும் பொது நிச்சயமாக இந்த படத்தை குடும்பத்துடன் போய் பார்க்கும்படி சுத்தமாக எடுத்திருக்கிறார்.
ஒரு ஞாபக மறதி ஆளின் கதையை எடுத்து கொள்ளும் போது இறங்கி சிக்ஸர் அடிக்க அவ்வளவு வாய்ப்புகள் திரைக்கதையில் இருந்தும் டெஸ்ட் மாட்சில் பதினோராவது ஆட்டக்காரர் ஆடுவது போல் அவ்வளவு தடுமாற்றம் தெரிகிறது. பொதுவாக ஒருவருக்கு ஒரு குறை இருக்கிறதென்றால் அதில் சில வரைமுறைகள் வகுத்தால் தான் அது கதையில் சுவாரசியமாக இருக்கும். இதில் அத்தகைய காட்சிகள் வம்புக்கு திணித்தது போல் தோன்றகிறது. உதாரணத்துக்கு கதாநாயகியின் நிறை மாத கர்ப்பிணி அக்காவை காரில் ஏற்றி கொண்டு ஆர்யா ஆஸ்பத்திரிக்காக தேடுவது மற்றும் வழி கேட்க போய் அவரை மறப்பது காமடிக்கும் உதவாமல் த்ரில்லுக்கும் உதவாமல் கடந்து போகிறது. இது போல பல காட்சிகள் படத்தில் ஒட்டாமல் தொக்கி நிற்கின்றன. திரைக்கதை நகர்வும் ஒரு சீராக இல்லாமல் சென்று அரத பழசான கிளைமாக்ஸில் முடிகிறது.
பாலமுரளி பாபுவின் இசை பாலுவின் ஒளிப்பதிவு மற்றும் பிரவீன் கே எல் ன் படத்தொகுப்பு படத்துக்கு தேவையானதை செவ்வனே செய்திருக்கின்றன. சந்தோஷ் பி ஜெய்குமாரும் ஸ்டூடியோ க்ரீனும் தங்கள் முந்தைய இரண்டு 'ஏ' படங்களிலிருந்து ஒரு க்ளீன் 'யு undefined படம் தந்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மை என்றாலும் காமடி என்று பார்த்தல் அவர்களின் ஹாரா ஹாரா மஹாதேவியே முதலிடம் வகிக்கிறது.
அதிகம் எதிர்பார்ப்பின்றி சுமாரான காமெடியை விரும்புபவர்களும் ஆர்யா சாயீஷா மற்றும் இதர கலைஞர்களின் நடிப்புக்காகவும் கஜினிகாந்தை ஒரு முறை பார்க்கலாம்
Comments