நோபல் பரிசு கடந்து வந்த பாதை… 2020 நோபல் பரிசுகள் குறித்த சில சுவாரசியத் தகவல்!!!

உலகிலேயே மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு ஆண்டுதோறும் சில குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் நோபல் விருதைப் பெறுவது மட்டுமல்ல, இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப் படுவதுகூட உலகம் முழுவதும் சிறந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மற்ற விருதுகளைப் போல இந்த விருதை வாங்கிய பிறகு யாரும் திருப்பி செலுத்த முடியாது. ஆனால் விருது அறிவிக்கப் படும்போதே அதன் உரிமையாளர்களால் நிராகரிக்கப்பட்ட வரலாறுகளும் நிகழ்ந்து இருக்கிறது.

வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவர் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்ததோடு உலகிலேயே சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார். அப்படி 1895 இல் தொடங்கப் பட்டதுதான் நோபல் அறக்கட்டளை. ஆனால் அந்த அறக்கட்டளை ஆல்ஃபிரட் இறந்த பிறகு 1901 ஆம் ஆண்டில் இருந்துதான் சாதனையாளர்களுக்கு விருதுகளை அறிவிக்கத் தொடங்கியது.

மனித குலத்திற்கு தேவையான விஷயங்களை செய்த சிறந்த சாதனையாளர்களை கவுரவிக்கும் நோக்கோடு தொடங்கப்பட்ட நோபல் விருது முதன்முதலில் 5 துறைகளுக்கு மட்டுமே பரிசுகளை அறிவித்தது. அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் மருத்துவத் துறைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. பின்னர் ரிக்ஸ் வங்கி அறிவித்த நன்கொடையை வைத்து 1969 ஆம் ஆண்டு முதல் பொருளதாரமும் இந்தப் பிரிவுகளின்கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டது.

1901 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட நோபல் பரிசு அறிவிப்பு நடைமுறைகள் இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் 3 முறை தொடர்ந்து நடைபெறாமல் இருந்ததாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன. அந்த ஆண்டுகளில் நோபல் பரிசுகளை பெறுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்றே நோபல் அறக்கட்டளை நிறுவனம் கருத்துத் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் உள்நாட்டு போர், கலவரம், இராணுவ அதிகாரம் தொடர்பான காரணங்களுக்காக நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும் போதே அதை பெறவிருந்த சிலர் நிராகரிக்கவும் செய்திருக்கின்றனர்.

இந்த விருதில் ஒரு தங்கப் பட்டயம், ஒரு சான்றிதழ் மற்றும் கோடிக் கணக்கில் பணமும் வழங்கப்படுகிறது. பரிசு அறிவிக்கப்பட்ட அந்த ஆண்டில் நோபல் அறக்கட்டளை பெற்ற வருமானத்தின் ஒரு பகுதியையே சாதனையாளர்களுக்கு பரிசாக வழங்கி வருகிறது. இந்த விருது நவம்பர் மாதத்தில் அறிவிக்கப் பட்டாலும் விருது வழங்கும் விழா ஆல்ஃபிரட் நோபல் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை 10 இந்தியர்கள் நோபல் விருதைப் பெற்றிருக்கின்றனர். அதில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சிலரும் அடக்கம். அதில் 1. ரவீந்திரநாத் தாகூர் (1913) ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான விருதினைப் பெற்றார். 2. சி.வி. ராமன் (1930) இல் இயற்பியல் துறையில் விருதினைப் பெற்றிருந்தார். 3. ஹரிகோவிந்த் கொரானா எனும் அமெரிக்கவாழ் இந்தியர் (1968) ஆம் ஆண்டு மருத்துவத் துறையில் விருதினைப் பெற்றார். 4. மதர் தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு (1979) ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. 5. சந்திரசேகர் சுப்பிரமணியம், அமெரிக்கா வாழ் இந்தியரான இவருக்கு (1983) ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான விருது வழங்கப்பட்டது.

6. பொருளாதாரத் துறையில் அமர்தியா சென் (1998) ஆம் ஆண்டு நோபல் விருதினை பெற்றார். 7. வெங்கட்ராம் ராமகிருஷ்ணன் வேதியியல் துறையில் (2009) ஆம் ஆண்டு நோபல் விருதினைப் பெற்றிருந்தார். 8. குழந்தைகளுக்கான எழுத்தாளராகிய கைலாஸ் சத்யாத்ரிக்கு (2014) ஆம் ஆண்டில் அமைதிக்கான துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விருதினை அவர் இளம் பேராளியான மலாலாவுடன் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 9. கடந்த ஆண்டு இந்திய வாழ் அமெரிக்கரான அபிஜித் பானர்ஜி பொருளாதாரத் துறையில் நோபல் பரிசினை வாங்கிக் குவித்தார். 10. அதே பொருளாதாரத் துறையில் அபிஜித் பானர்ஜியின் மனைவி எஸ்தர் டூஃப்லோவிற்கு நோபல் விருது வழங்கப்பட்டது.

நீண்ட நெடிய நோபல் விருது பட்டியலில் 3 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது மேலும் சிறப்பான விஷயமாகப் பார்க்கப் படுகிறது. இந்நிலையில் 2020 நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் இன்று முதல் தொடங்கப்பட இருக்கிறது. அதில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இன்று மதியம் அறிவிக்கப்பட இருக்கிறது. அக்டோபர் 6 – இயற்பியல், அக்டோபர் 7- வேதியியல், அக்டோபர் 8-இலக்கியம், அக்டோபர் 9 -அமைதி, அக்டோபர் 10- பொருளதாரம் என அடுத்தடுத்த விருது பட்டியல்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்தப் பட்டியலில் இயற்பியல், மருத்துவம், இலக்கியம், வேதியியல், பொருளாதாரம் எனும் 5 துறைகளுக்கான விருது பட்டியல் ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டோக்வோஜில் இருந்து வெளியிடப்படும். மேலும் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் உள்ள ஆஸ்லோ நகரில் இருந்து வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2020 நோபல் பரிசுக்கான பரிந்துரையில் 211 தனி நபர்கள், 107 அமைப்புகள் என 318 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.