குழந்தைகளுக்குக் காய்ச்சல் வருவதுகூட ஒருவகையில் நல்லதுதான்!!! ஏன் இப்படி சொல்றாங்க தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
சிறுவயது குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்கும் பெரியவர்கள் ‘இந்த வயதில் காய்ச்சல் வருவதெல்லாம் சகஜம்தான், அப்படியே விடுங்க சரியாகிவிடும்’ எனச் சொல்வதைக் கேட்டிருப்போம். இப்படி பெரியவர்கள் மட்டுமல்ல மருத்துவர்களும் சொல்வதுதான் ஆச்சர்யமே. காய்ச்சல் என்றாலே நமக்கு ஃப்ளு, நிமோனியா போன்ற வைரஸ் தொற்றுகள் நியாபகத்துக்கு வந்து விடுகிறது. இது சாதாரண காய்ச்சலா அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றா எனத் தெரியாமல் மருத்துவர்களை நாடுகிறோம்.
நமக்கு வரும் பெரும்பலான காய்ச்சல், சளி போன்ற தொல்லைகளை பாக்டீரியா போன்ற வலுக்குறைந்த நுண்ணுயிரிகளும் ஏற்படுத்துகின்றன. பாக்டீரியாக்களில் சில நல்ல பாக்டீரியாக்கள் கூட இருக்கத்தான் செய்கின்றன. வைரஸ்களிலும் எல்லா வைரஸ்களும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுவதில்லை. சில நல்ல வைரஸ்களும் நமது உடலில் இருக்கிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பெரும்பகுதி வைரஸ்களால் ஆனவைதான். இப்படி பல புதிர்களைக் கொண்ட நமது உடலுக்கு சிறிய வயதிலேயே காய்ச்சல், சளி போன்ற தொல்லைகள் வந்தால் அது எதிர்காலத்தில் வரும் பெரும்தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும் எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1918 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஸ்பானிஷ்ஃப்ளூ. முதலாம் உலகப்போருக்குப் பின்னர் உலகையே உலுக்கி எடுத்த இந்த காய்ச்சல் 5 கோடி உயிர்களைக் காவு வாங்கியது. இந்தியாவில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சம். கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் 3 இல் 1 பகுதி மக்களுக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட இந்த ஸ்பானிஷ்ஃப்ளூவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் எனவும் கூறப்படுகிறது. முதலில் பறவைகளில் இருந்தே இந்நோய்த் தொற்று பரவியது எனவும் கூறப்பட்டது. மேலும் இந்நோய்த்தொற்றால் உலகப் போரின் அடையாளத்தையே காணாத பசிபிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் கூட மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர். இப்படி ஒரு காய்ச்சல் உலகையே வாரி சுருட்டிக் கொள்ளும் அளவிற்கு வலுப்பெற்றவையாக இருந்ததை விஞ்ஞானிகள் முதல் முறையாக பார்ப்பதற்காக வரலாற்றில் பதிவும் செய்து வைத்திருக்கின்றனர்.
ஸ்பானிஷ்ஃப்ளூ நோய்த்தொற்றுக்கும் சிறுவயதில் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரவேண்டும் என்பதற்கும் அதிகத் தொடர்பு இருக்கிறது. அதாவது இந்நோய்த்தொற்றால் இறந்தவர்கள் பெரும்பாலும் 20 வயதிற்கும் குறைவானர்கள் என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நோய்த் தொற்று பரவியபோது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் தாக்கியது. ஆனால் வயது முதியவர்கள் கூட கடுமையான உடல் பாதிப்புகளுக்குப் பின்பு பிழைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இளைய வயதில் இருந்த அனைவரும் தங்களது உயிரை இழக்க வேண்டி வந்தது. 1918 இல் பரவிய இந்நோய்த்தொற்றின் திசு மாதிரியை 1990 ஆம் ஆண்டுகளில் அறிவியல் அகாடமி சோதனைக்கு எடுத்துக் கொண்டது.
அந்த திசு மாதிரியை குரங்குகளுக்கும் சுண்டெலிக்கும் கொடுத்து சோதித்து பார்த்ததில் காய்ச்சலை ஏற்படுத்துவதற்கு பதிலாக, நோய் எதிர்ப்பு மண்டலம் அதிக வலுப்பெறுவது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. அந்த ஆய்வின் முடிவில் ஸ்பானிஷ்ஃப்ளூ நோய்த்தொற்றானது, நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருப்பவர்களுக்கு மட்டுமே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. அதாவது இந்த நோய்த்தொற்றும் சாதாரண வைரஸ் காய்ச்சலைப் போன்றதுதான். ஏற்கனவே காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை ஸ்பானிஷ்ஃப்ளூ அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் புதிதாக காய்ச்சலை அனுபவிக்கும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை இந்நோய்த் தொற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதாகக் கூறப்பட்டது.
அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் ஒரோபி இந்நோய்த்தொற்றை பற்றிய அடுத்த கட்ட ஆய்வினை மேற்கொண்டார். அதில் 1918 க்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஸ்பானிஷ்ஃப்ளூ வலுப்பெறாத அளவில் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தாகவும் முதலில் அது பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாக வைரஸாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். அடுத்து இன்ப்ளூயன்ஸா போன்ற காய்ச்சல் வைரஸ்களுடன் சேர்த்து புது கலப்பினத்தை உண்டாக்கி ஸ்பானிஷ்ஃப்ளூ வீரியம் கொண்டதாக மாறியது எனவும் அந்த குழு நடத்திய ஆய்வில் கூறப்பட்டது. அதோடு நிற்காமல் பறவைகளுக்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸோடு இந்த வீரியம் கொண்ட ஸ்பானிஷ்ஃப்ளூ சேர்ந்துக் கொண்டதால் அதிக வேகமாக பரவும் அபாயமான நோய்த்தொற்றாக மாறியது எனவும் ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது.
இந்த வைரஸ் ஃப்ளூ, இன்ப்ளூயன்ஸா போன்ற பல வடிவங்களில் ஏற்கனவே உலகம் முழுவதும் சுற்றித் திரிந்த போது பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பறவையினத்தின் வைரஸோடு ஏற்பட்ட புதுக் கலப்பினத்தால் பெருந்தொற்றாக மாறி உலகம் முழுவதும் சிறு வயதினர்களை கொன்று அழித்தது. ஏனெனில் சிறு வயதில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு ஃப்ளூ, இன்ப்ளூயன்ஸா போன்ற காய்ச்சல் ஏற்பட்டு இருக்காது. புதிதாக ஸ்பானிஷ்ஃப்ளூ நோய்த்தொற்று ஏற்பட்ட உடனே அந்நோயை எதிர்த்து போராடும் அனுபவத்தை அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பெற்றிருக்கவில்லை. முதியவர்கள் ஸ்பானிஷ்ஃப்ளூவால் பாதிக்கப்பட்டாலும் அவரிகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிராக முன்னமே போராடியிருப்பதால் மிக எளிதாக உயிர் பிழைத்துக் கொள்ள முடிந்தது. இந்தக் காரணங்களால்தான் விஞ்ஞானிகள் குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவது கூட நல்லதுதான். அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலங்களை காய்ச்சலுக்கு பழக்குங்கள் எனப் பரிந்துரைக்கின்றனர். எனவே மனித உடலில் பரவும் பாக்டீரியா, வைரஸ் அனைத்துமே ஆபத்தானவை அல்ல. மென்மையானவையும் இருக்கத்தான் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout