'கெத்து'க்கு வரிவிலக்கு மறுத்தது ஏன்? நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
- IndiaGlitz, [Thursday,January 28 2016]
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் 'கெத்து' திரைப்படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது. 'கெத்து' என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி வரிவிலக்கு சலுகை மறுக்கப்பட்டதை எதிர்த்து தயாரிப்பாளர் உதயநிதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, "கெத்து என்ற தமிழ் வார்த்தைக்கு இணையாக பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கில பெயரில் முதல் எழுத்து K என்பதற்குப் பதிலாக G என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரிவிலக்கு அளிக்க முடியாது. மேலும் 'கெத்து' என்ற சொல் தமிழ் வார்த்தை கிடையாது' என்று வாதிட்டார். இதை உறுதிப்படுத்துவதைப் போல தமிழ்வளர்ச்சித்துறை மண்டல இயக்குநரும் தனது பதில் மனுவில் கெத்து என்பது தமிழ்வார்த்தை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ' “கெத்து” என்பது தமிழ் வார்த்தை தான். சமீபத்தில் வெளியான சில படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கெத்து என்பது தமிழ் வார்த்தை இல்லை என்றுகூறி வரிவிலக்கு தரமறுக்கின்றனர் என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் நாளை அதாவது ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.