'கெத்து' பட வரிவிலக்கு வழக்கு. சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

  • IndiaGlitz, [Saturday,January 23 2016]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'கெத்து' திரைப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டது. 'கெத்து' என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதுதான் வரிவிலக்கு மறுப்பிற்கு காரணமாக கூறப்பட்டது. இதையடுத்து 'கெத்து' தமிழ் வார்த்தைதான் என்றும், தனது படத்திற்கு வரிவிலக்கு அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர்களும், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஹரிகுமார் அவர்களும் ஆஜராகினர். பி.வில்சன் வாதாடும்போது, கெத்து' என்பது தமிழ் வார்த்தைதான் என்பதற்கான ஆதாரங்களை எடுத்துக் கூறினார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஹரிகுமார், கெத்து என்பது தமிழ்ச் சொல் இல்லை என தமிழ் அகராதியிலேயே கூறப்பட்டிருப்பதாக வாதாடினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ''திருப்புகழிலேயே கெத்து' என்ற வார்த்தை இருப்பதை தமிழ் பாடல்கள் மூலம் அறிகிறேன். எனவே, அந்த வார்த்தை அகராதியில் இல்லை என்பதை அரசு தரப்பு நிரூபித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கூறியதோடு கெத்து' படத்துக்காக வசூலிக்கப்பட்ட கேளிக்கை வரி குறித்த விவரங்களையும் வரும் 27ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று மனுதாரருக்கும் உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.